‘பெண்களால் வெல்ல முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை!’
வானொலி தொகுப்பாளர் பணியில் துவங்கி, ‘டிவி’ மற்றும் சினிமா என முன்னேறிக் கொண்டிருக்கும், பெண் ஊடகவியலாளர் ஜோப்னா அலிஸ்: மீடியா வேலை என்பது அழகும், வெளிச்சமும் நிறைந்த உலகமாக தெரியலாம். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் சிரமம் புரியும். அதுவும் பெண் ஊடகவியலாளர் என்றால், அந்த சவால் இரண்டு மடங்காகி விடும். என் சொந்த ஊர் கோவை மாவட்டம். சிறு வயதிலேயே ஊடகத்துறை மீது பேரார்வம் இருந்தது. என் பள்ளி நாட்களில், சின்னத்திரை இயக்குநர் நாகா, பயிற்சி பட்டறை நடத்த வந்திருந்தார். அந்த இரண்டு நாட்களும் அவர் பகிர்ந்த தகவல்கள், மனதுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மீடியா துறைக்குள் எப்படி நுழைவது, அங்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன். மீடியாவை ஒரு பொழுதுபோக்கு விஷயமாக நாம் வைத்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அதை அனைவரும் அனுமதிப்பது இல்லை. அதிலும் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் பெற்றோரின் கவலை இன்னும் கூடுதலாகி விடும். ‘நிலையற்ற வருமானம், கால நேரம் இல்லாத வேலை’ என்று என் பெற்றோரும் முதலில் தயங்கினர். என் ஆர்வத்தையும், திறமையையும் பார்த்த பின் ஆதரவு அளித்தனர். தீவிர முயற்சியின் பலனாக, ‘ரேடியோ சிட்டி’ வானொலியில் வாய்ப்பு கிடைத்தது. என் திறமையை கண்டறிந்த நிர்வாகம், ‘சிட்டியோட புது வைப்’ என்ற வார இறுதி நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை வழங்கியது. சென்னையின் கலாசாரம், வார இறுதி நிகழ்வுகள், நகரின் புதிய வரவுகள் பற்றி பேசுவது, அந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். குரலை மட்டுமே மூலதனமாக கொண்டு, ஆயிரக்கணக்கான நேயர்களோடு ஆழமான ஒரு பிணைப்பை உருவாக்குவது எப்படி என்பதை, அந்த வானொலி அனுபவம் கற்றுக் கொடுத்தது. நிறைய பேர் மீடியாவுக்குள் வர விரும்புகின்றனர். அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று தான். திரைக்கு பின் இருக்கும் காலவரையறையற்ற உழைப்பு, அழுத்தம், வாய்ப்புகளுக்கான காத்திருப்பு, தொடர்ந்து வரும் நிராகரிப்புகள் ஆகியவை இந்த துறையின் நிதர்சனம். அதிலும் சிறிய நகரம் அல்லது கிராமத்தில் இருந்து வந்தால், இன்னும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் கடந்து களத்தில் நிற்பேன், கற்றுக் கொள்வேன் என்ற மனப்பான்மையில் நாம் இயங்க வேண்டும். வாய்ப்புகளுக்காகவோ, அல்லது புகழுக்காகவோ உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள். கவனத்துடனும், தொடர் முயற்சியோடும் உழைத்தால், ஊடகத்துறையில் பெண்களால் வெல்ல முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை.