பாராட்டு, திட்டு எதையும் பெரிதாக எடுத்துக்க மாட்டோம்!
'யு டியூப்'பில் சமையல் வீடியோக்கள் போட்டு அசத்தும், துாத்துக்குடி மாவட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தந்தை விஜய், மகள் சிவசங்கரி:என் அம்மா பெயர் லட்சுமி. அவர்கள் பெயரில் தான் சமூக வலைதளத்தில், 'ஐடி' வைத்துள்ளோம்.வார நாட்களில் பள்ளி செல்வது, படிப்பது, விளையாடுவது என்று நேரம் சரியாக இருக்கும். அதனால், வார இறுதி நாட்களில் மட்டும் தான் வீடியோ பண்ணுவோம். வீடியோவில் நான் என்ன பேச வேண்டும் என்று, அப்பா சொல்லிக் கொடுப்பார்.அதை உள்வாங்கி எப்படி சொல்ல வருகிறதோ, அப்படி சொல்வேன். வீடியோ எடுப்பதற்கு முன், நான்தான் வகுப்பில் முதல் ரேங்க் எடுப்பேன்; தற்போதும் நான்தான் முதல் ரேங்க்.விஜய்: நான் போளி வியாபாரம் செய்கிறேன். ஏழு ஆண்டு களுக்கு முன் ஒரு சேனல் ஆரம்பித்து, அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வந்தேன். ஆனால், அந்த சேனல், 'பிக் அப்' ஆகவில்லை. சமூக வலைதளம் குறித்து முழுதாக தெரியாமல் நிறைய ரூபாயை அதில் இழந்து விட்டேன்.என் மகள் பிறந்த பின் தான் பொறுப்பு வந்தது. சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் வீடியோ செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. கடன் வாங்கி, அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன் வாங்கினேன்.என் மனைவியிடம் சமையல் வீடியோ பண்ண சொன்னேன். அவர் தயங்கினார். என் மகள் தான், 'நான் பண்றேன்'னு சொன்னாள். அதனால், பாப்பாவை முன்னிலைப்படுத்தி வீடியோ செய்ய ஆரம்பித்தோம்.வீடியோ எடுப்பது, எடிட் பண்றது, அப்லோடு செய்வது போன்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என் மனைவி சமைப்பார். வீடியோவில் என் மகள் தான் பேசுவாள்.அவளின் இயல்பான பேச்சுக்கு தான் நல்ல வரவேற்பு. தற்போது ஐந்து லட்சம், 'பாலோயர்ஸ்' வந்திருக்காங்க; ஒரு லட்சம்கிட்ட, 'சப்ஸ்கிரைபர்ஸ்' இருக்காங்க.சமூக வலைதளம் என்பது ஒரு பொழுது போக்கு தான். என் மகளுக்கு டீச்சருக்கு படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. பலர் அவரை பாராட்டி, கமென்ட் பண்ணுவாங்க. சிலர் திட்டுவாங்க. எதையுமே நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, வயதான அம்மா ஒருவர் கேட்டார். போட்டோ எடுத்ததும், நக்கலான தொனியில், 'என்ன பாப்பா, ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறியா'ன்னு கேட்டார்.'லட்சம் ரூபாய் என்றால் எவ்வளவுப்பா' என, பாப்பா வெகுளியாக கேட்டது. 'ஒருநாள் சம்பாதிப்போம் தங்கம்' என்று கூறினேன். ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும். அவனுக்கு ஆசை இருக்கக்கூடாது என்று நினைப்போர் நினைத்துக் கொள்ளட்டும்; நாங்கள் முன்னேறி போயிட்டே இருக்கோம்.