6 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம்!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், 'புனித காடுகள்' என்ற பெயரில் ஏராளமான குறுங்காடுகளை உருவாக்கி வரும், பாரதி திரைப்படத்தில் பாரதியாராக நடித்து பிரபலமான, 66 வயதான, ஷாயாஜி ஷிண்டே: அடிப்படையில் நான் ஒரு விவசாயி. 2015ல் நானும், நண்பர்கள் சிலரும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள திவாடி என்ற கிராமத்திற்கு சென்றோம். மிகவும் வறண்ட நிலையில் அக்கிராமம் இருந்தது. வனப்பகுதியில் கூட போதுமான மரங்கள் இல்லை. அக்கிராமத்தில் வெப்பம் தகித்தது. அங்கு, வறட்சியை போக்க ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க துவங்கினோம். மேற்கு தொடர்ச்சி மலையான, சஹாத்ரி மலையடிவார பகுதிகளில், வறட்சியாக காணப்பட்ட சில கிராமங்களை தேர்ந்தெடுத்து, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன், இதுவரை, 29 குறுங்காடுகளை உருவாக்கி உள்ளோம். இதுபோன்ற குறுங்காடுகளால், மலைச்சரிவில் இருந்து வேகமாக வரக்கூடிய மழைநீரின் வேகத்தை கட்டுப்படுத்தி, மண் அரிப்பை தடுக்க முடிகிறது. குறுங்காடுகளில் சேமிக்கப்படும் மழைநீரால், அந்தந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. சாங்கிலி, அவுரங்காபாத், ஜல்கான், அகமத் நகர், பீட்நாசிக், யவத்மால், லாத்துார், சோலாப்பூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள், கோவில் வளாகங்கள், பூங்காக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மைதானங்களில் மரங்கள் வளர்த்து வருகிறோம். மா, நாவல், கொய்யா, புளி உள்ளிட்ட பழ மரங்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட அரியவகை மூலிகை மரங்களையும் அதிக அளவில் நடவு செய்திருக்கிறோம். நாங்கள் உருவாக்கியுள்ள குறுங்காடுகளில் இருந்து விதைகளை சேகரித்து, மரக்கன்றுகள் உருவாக்கி, பிற இடங்களில் நடவு செய்கிறோம். ஆண்டுதோறும் பருவமழை காலம் துவங்கும்போது மரக்கன்றுகளை நடவு செய்வதால், அடுத்த நான்கு மாதங்களில் அவை செழிப்பாக வளர்கின்றன. அடுத்த ஓராண்டு வரை, எங்கள் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி மரங்களை பராமரிப்பர். அதன்பின், எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்கின்றன. விவசாயிகளுக்கு பழமரக் கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில், 6 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்த பசுமை பணி, என் வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என்பதே என் பெரும் கனவு!