உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / திருக்குறள் நுாலை அன்பளிப்பாக வழங்குகிறோம்!

திருக்குறள் நுாலை அன்பளிப்பாக வழங்குகிறோம்!

சென்னை அருகே உள்ள திருத்தணியைச் சேர்ந்த இலக்கிய தம்பதி, கு.செ.சரஸ்வதி - ச.ம.மாசிலாமணி சரஸ்வதி: எனக்கு தமிழ் மீது தீராத காதல். நான் படித்தது பிளஸ் 2, நுாலகர் படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி மட்டும் தான். அப்போது தமிழ் படித்த இவர், எங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வந்த போது, எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. பின், எங்கள் இருமனமும் ஒன்றானது.என் தமிழார்வத்தை புரிந்து கொண்ட என்னவர், தமிழில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க என்னை ஊக்குவித்தார். தனக்கு சமமாக மனைவி இருக்கக்கூடாது என்று பலர் நினைக்கையில், என்னை மேலும் மேலும் படிக்க வைத்து மெருகேற்றினார்.அவர், துவக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தாலும், கல்லுாரியில் எனக்கு தமிழ் துறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் பணி கிடைத்தது.அவற்றை தமிழுக்கு கிடைத்த பணியாக நினைத்து திறம்பட செயலாற்ற, என்னை ஊக்குவித்தார். நாங்கள் இதுவரை, 75 ஆய்வு கட்டுரைகள், மூன்று தமிழ் நுால்கள் எழுதி இருக்கிறோம். தனித்தனியாக மட்டுமல்லாமல், இருவரும் இணைந்தே சில நுால்களை எழுதி இருக்கிறோம். எங்களை, மனமொன்றி இவ்வளவு துாரம் வழிநடத்தி வந்தது தமிழும், திருக்குறளும் என்றால் மிகையல்ல!மாசிலாமணி: எங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை புத்தகங்கள் வாங்க ஒதுக்குகிறோம். எங்களது மூன்று குழந்தைகளுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று, நல்ல நுால்களை தேர்வு செய்து வாங்கி வந்து, ஒன்றாக படிப்போம். எங்கள் வீட்டு மாடியில் நுால்கள், விருதுகள், சான்றிதழ்களை பாதுகாத்து வருகிறோம். அங்கு போய் விட்டால் தமிழ் சோலைக்குள் புகுந்த மகிழ்ச்சி ஏற்படும். நிறைய எழுத வேண்டும் என்பதை விட, நிறைய வாசிக்க வேண்டும் என்ற பெருங்கனவு எங்களுக்கு உண்டு.தமிழக அரசின், 'செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' திட்ட இயக்கத்தின், துாய தமிழ் பற்றாளர் விருதும், பள்ளிக்கல்வித் துறையின், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் பெற்றிருக்கிறேன்.இந்த விருதுகள் எனக்கு கிடைத்ததாக பெருமைப்படவில்லை. என் தமிழ் பணி, கல்வி பணி, திருக்குறள் பரப்பியல், வாழ்வியல், ஆய்வியல் பணிகளுக்கு கிடைத்ததாகவே நினைக்கிறேன். பழனியில், சமீபத்தில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஆய்வு மலரில், எங்கள் இருவரின் ஆய்வு கட்டுரைகள் தேர்வாகி வெளிவந்திருப்பது பெருமைக்குரியது.இல்லந்தோறும் இருக்க வேண்டியது திருக்குறள் என்பது எங்கள் கருத்து. எனவே தான், எந்த நிகழ்விற்கும் பரிசு வழங்கும் போதோ, சீர் செய்யும் போதோ திருக்குறள் புத்தகத்தையும் சேர்த்து வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நாங்கள் இருவருமே தமிழக கவர்னரின் கரங்களால் முனைவர் பட்டம் பெற்றுஉள்ளோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை