உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சுவைத்து பார்த்து பிடித்தால் மட்டுமே வாங்கச் சொல்வோம்!

சுவைத்து பார்த்து பிடித்தால் மட்டுமே வாங்கச் சொல்வோம்!

ஊட்டியில், 'ஜெய்ஸ் கிங் ஸ்டார் சாக்லேட்' கடை நடத்தும் விவேக்: ஊட்டியில், பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில், முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என் தாத்தா தம்பு ஸ்வாமி. சாக்லேட் தயாரிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து, 1942ல் தனியாக சாக்லேட் கடையை துவக்கினார். அவருக்குப் பின், என் அப்பா பொறுப்புகளை ஏற்றார். அதன்பின் நான் என, மூன்று தலைமுறைகளாக வெற்றிகரமான கடையாக இயங்கி வருகிறது. சாக்லேட் என்றாலே கொண்டாட்டம் என்று அர்த்தம். அன்பை வெளிப்படுத்தும் பரிசுப் பொருளாகவும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பது சாக்லேட்தான். இதில், காலத்துக்கு ஏற்ப புதுமைகளை புகுத்தலாம். ஆனால் தரத்திலும், சுவையிலும் எந்த சூழலிலும் சமரசமே செய்யக்கூடாது என்பதுதான் எங்களின் தாரக மந்திரம். எங்களுக்கு என தனித்துவமான தயாரிப்புகளை, இன்றும் செய்து வருகிறோம். புரூட் அண்டு நட்ஸ், மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ஜிஞ்சரி, சில்லி, பான், சுகர் ப்ரீ, ஒயிட், பார்க் என கிட்டத்தட்ட 50 வகையான சாக்லேட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்.இயற்கையான பொருட்களையே தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம். எதிலும் எசன்ஸ் கலப்பதில்லை. இந்த தொழிலில் கொக்கோ தான் அனைத்தையும் தீர்மானிக்கும். மூலப்பொருளான கொக்கோ கொட்டைகளை வாங்குவதில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஆரம்பத்தில், இலங்கையில் இருந்துகூட கொள்முதல் செய்தோம். தற்போது, கேரளாவிலேயே தரமான கொட்டைகள் கிடைக்கின்றன.கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். சேல்ஸ் கவுன்டரைக் காட்டிலும், தயாரிப்பு யூனிட்டில்தான் அதிக நேரம் இருக்கிறேன். தாத்தா காலத்து வாடிக்கையாளர்களின் வாரிசுகள் இன்றைக்கும் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.கடைக்குள் யார் நுழைந்தாலும், சுவைத்துப் பார்க்க சாம்பிள் கொடுப்பது வழக்கம். சுவைத்துப் பார்த்து பிடித்தால் மட்டுமே வாங்கச் சொல்வோம். வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து தொழில் செய்தால், எங்கிருந்தாலும் தேடி வருவர்.தரத்தில் குறை வராமல் பார்த்துக் கொள்வதால்தான், தலைமுறைகளை கடந்தும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடிகிறது. புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடிகிறது. எங்கள் கடையில் 30 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர்.கொக்கோ விலை உயர்வு காரணமாக, சாக்லேட் விலை சற்று உயர்ந்திருக்கிறது. 1 கிலோ சாக்லேட் 2,200 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ