வேலை, தொழிலை எல்லாம் தாண்டி நிறைவை தருது!
திருமணத்தன்று, மணமக்களை ஓவியமாக வரைந்து கொடுக்கும், 'லைவ் வெட்டிங் டிராயிங்' என்ற ஓவியத்தை, சென்னையைச் சேர்ந்த கேசவன் - மதி தம்பதி வரைகின்றனர். ஐடியா தோன்றியது குறித்து கூறும் மதி:என் தங்கை, அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளது தோழிக்கு பிறந்த நாள் வந்தபோது, அந்த பெண்ணின் படத்தை வைத்து, ஒரு கிப்ட் செய்து கொடுத்தேன்; அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.கொரோனா நேரத்தில் தான், 'இதை ஏன் பிசினசா செய்யக்கூடாது'ன்னு என் கணவர் கேட்டார். உடனே, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தோம்; எதிர்பாராத வரவேற்பு. புதுசா ஏதாவது செய்யலாம்னு யோசித்த போது தான், 'லைவ் வெட்டிங் டிராயிங் ஐடியா' வந்துச்சு.இதை, முதன் முதலில் என் உறவினரின் திருமணத்தில் செய்தோம். வரைந்து முடிய, 10 மணி நேரமானது. தாலி கட்டி முடித்தவுடன், அந்த மேடையிலேயே மணமக்கள் கையில் தந்தோம். அவங்க சந்தோஷம், வேற 'லெவல்!'மணமக்களுக்கு எதிரே, 'ட்ரைபேட் ஸ்டாண்ட்' போட்டு செட்டிலாகிடுவோம். மணமக்கள் வந்தவுடனே அவர்களை மட்டும், குளோஸா ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம். ஏனெனில், மேடையில் அவர்கள் அங்கும் இங்கும் அசைந்தபடியே இருப்பர்; நம் கவனம் சிதறும்.ஒரு ஓவியத்தில் 32 லேயர்கள் இருக்கு; காய காயத் தான் வரைய முடியும். சின்ன தவறு நடந்தால் கூட கேன்வாஸ் வீணாகி, புதுசா ஆரம்பிக்கிற மாதிரி ஆகிடும். 'ரீ- - ஒர்க்' செய்யவும் நேரம் இருக்காது. முழுசா வரைஞ்சு முடிக்க, ஆறு முதல் எட்டு மணி நேரம் தேவைப்படும்.இன்னொரு பக்கம், 'ட்ரீ ஆப் லவ்'னு ஒரு கான்செப்ட்ல, வர்ற விருந்தினர்களிடம் கைரேகைகளை வாங்கி, கேன்வாஸ்ல ஒரு பேமிலி ட்ரீயை உருவாக்குவார் எங்கள் டீமில் உள்ள மற்றொரு ஓவியர். அதிலும் மணமக்கள் இருப்பர்.அதையும் திருமணம் முடிந்த உடனே தருவோம். லைவ் வெட்டிங் டிராயிங் இப்போ பயங்கர டிரெண்ட். ஒரே நாள்ல திருப்பூர், சென்னை, தென்காசின்னு முணு ஈவென்ட்லாம் வந்திருக்கு. எங்களிடம், 24 பேர் வேலை செய்கின்றனர்.இப்ப, 'ட்ரீம் கம் ட்ரூ மொமென்ட்ஸ்'னு ஒரு கான்செப்ட் எடுத்திருக்கோம். நிறைய கனவுகள் நமக்கு இருக்கும். எல்லா கனவுகளும் நனவாவதில்லை. அதெல்லாம் நடந்தா எப்படியிருக்கும்?ஒரு பொண்ணு, 'ஆர்மியில வேலை செஞ்ச எங்க அப்பா என்னோட, 10 வயதில் இறந்து விட்டார். இப்போ எனக்கு 20 வயது. என் பிறந்த நாளில் அவர் இருந்தா எப்படியிருக்கும்னு ஒரு ஓவியம் வரைஞ்சு தர முடியுமா'ன்னு கேட்டாங்க. இமேஜின் பண்ணி வரைந்து தந்தோம். அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். வேலை, தொழிலை எல்லாம் தாண்டி, இது வேறொரு நிறைவை தருது.