பி.ஏ.பி., கால்வாய் தடுப்பு சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்
புதர் சூழ்ந்த கம்பம்
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் விஜயராகவன் வீதியில் ரோட்டோரம் உள்ள தனியார் தொலைத்தொடர்பு கேபிள் கொண்டு செல்லும் கம்பத்தில் அதிகளவு செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால், அப்பகுதி புதர் போன்று மாறி வருகிறது. ரோட்டோர புதரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- டேனியல், பொள்ளாச்சி. குப்பையான மின்கம்பம்
கிணத்துக்கடவு, ஏழூர் பகுதியில் இருந்து சிக்லாம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் பழுதடைந்த மின்கம்பம் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மின்வாரியத்தினர் கவனித்து உடனடியாக அகற்ற வேண்டும்.- சதீஷ், கிணத்துக்கடவு. தடுப்பு அமைக்கணும்!
பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பிரிவில், கோவை செல்லும் ரோட்டின் ஓரத்தில் செடிகள் மற்றும் மரக்கிளைகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுனர்கள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த செடிகளை அகற்றம் செய்து ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும்.- பாலசுப்ரமணியம், பொள்ளாச்சி. தடுப்பு சீரமைக்கப்படுமா?
நெகமம், வகுத்தம்பாளையம், தேவணாம்பாளையம் செல்லும் ரோட்டின் நடுவே உள்ள பி.ஏ.பி., கால்வாய் தடுப்பின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. விபத்து அபாயம் நிலவுகிறது. இதை, பி.ஏ.பி., அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.---- மோகன், நெகமம். பூங்காவில் சேதம்
உடுமலை நகராட்சி ஸ்டேட் பாங்க் காலனி பூங்காவில் சிறுவர்கள் உட்காரும் இருக்கை சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள், சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதை நகராட்சியினர் சரி செய்ய வேண்டும்.- கார்த்திக், உடுமலை. குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, வெங்கடகிருஷ்ணா ரோட்டில் குப்பைக்கழிவுகள் தீ வைத்து எரிப்பதால் அதிகமான புகை பரவுகிறது. பலத்த காற்றினால் அருகிலுள்ள பகுதிகளிலும் புகை வருவதால் பலருக்கும் மூச்சு பிரச்னை ஏற்படுகிறது. குப்பைக்கழிவுகளை எரிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஸ்வரி, உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை, நேதாஜி விளையாட்டு மைதானம் முன்புறம் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் வழிமறித்து நிறுத்தப்படுவதால் மைதானத்துக்கு வருவோருக்கும் சிரமம் ஏற்படுகிறது.- பாலாஜி, உடுமலை. ரோட்டில் குப்பைகுவியல்
உடுமலை பெரியார் நகர் செல்லும் ரோட்டில், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நகராட்சியினர் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை. ரோடு சேதம்
உடுமலை, பெரியகடை வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அப்பகுதியில் வணிக கடைகளும் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் மட்டுமில்லாமல், அவ்வழியாக நடந்து செல்வோரும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.- செந்தில்குமார், உடுமலை. சுகாதார சீர்கேடு
உடுமலை, பெரியகோட்டையில் வீடுகளில் குப்பைக்கழிவுகள் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனால் பலரும் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். வீடுகளில் அதிக நாட்கள் கழிவுகளை வைப்பதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது.- ராஜேஸ்வரி, பெரியகோட்டை. பயன்பாடற்ற குழாய்
பொள்ளாச்சி, குரும்பபாளையம் செல்லும் ரோட்டில் உபயோகப்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் குழாய் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், நெகமம்.