உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி; தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை

காஞ்சிபுரம் : புகார் பெட்டி; தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை

தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு ஆவணங்கள் பெற தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கழிப்பறையை அவசரத்திற்கு பயன்படுத்தினாலும், தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும்.- ஆர்.ரவிசங்கர், காஞ்சிபுரம்.

இரண்டு தெருக்களில் குப்பை அகற்றப்படுமா?

காஞ்சிபுரம் மாநகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட பிராமணர் தெரு, சத்திரத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு குப்பைகளை அகற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. துாய்மை பணியாளர்கள் இந்த இரண்டு தெருக்கள் மீதும் கவனம் செலுத்துவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து பெயரளவிற்கு சுத்தம் செய்வதாக கூறிவிட்டு, தெருவாசிகளிடம் கையெழுத்து வாங்கி செல்கின்றனர். பலமுறை கூறியும் இத்தெருக்களுக்கு குப்பைகளை எடுத்து செல்ல வருவதில்லை. இதனால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. மேலும், சுகாதாரமும் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.குமரன், காஞ்சிபுரம்.

உடைந்த கண்ணாடி சீரமைக்கப்படுமா?

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ், கடவு பாதையின் இருபுறமும் வாகனங்கள் வருதை அறிந்துக்கொள்ளும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டது.மூன்று மாதங்களாக ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து காஞ்சிபுரம் மார்கமாக செல்லும் பக்கம் கண்ணாடி உடைந்து உள்ளது.இதனால், சந்தவேலுார் கிராமத்தில் இருந்து மறுபக்கம் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள், கிராம பொதுமக்கள் சாலையை கடக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடைந்த கண்ணாடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு. ஆதித்தியன், சந்தவேலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !