“மாவட்டத்துக்கு ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் புண்ணியமில்லன்னு புலம்பறா ஓய்...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம் தொகுதிகள்ல தெருநாய்கள் தொல்லை அதிகமாயிடுத்து... விவசாயிகளின் கோழிகள், ஆடு, மாடுகளை தெருநாய்கள் கடிச்சு காவு வாங்கிடறது ஓய்...“விவசாயிகள் எல்லாம் தங்களுக்கு இழப்பீடு வழங்கணும்னு கேக்கறா... காங்கேயம் எம்.எல்.ஏ.,வான அமைச்சர் சாமிநாதன்,தாராபுரம் எம்.எல்.ஏ.,வான அமைச்சர் கயல்விழி ஆகியோர் இதை கண்டுக்கவே இல்ல ஓய்...“அதே நேரம், பக்கத்து மாவட்டமான ஈரோட்டுல, தெருநாய்களால பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அமைச்சர் முத்துசாமி, கட்சி சார்புல நிதியுதவி செய்திருக்கார்... இதனால, திருப்பூர் மாவட்ட அமைச்சர்கள் மீது விவசாயிகள் அதிருப்தியில இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.“சம்பளம் வருமான்னு பயப்படுறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் இருக்கு... ஊராட்சிகள்ல தலைவர்கள் இருந்தப்ப, டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணிக்கு தற்காலிக ஊழியர்களை நியமிச்சு, நிர்வாகத்தை நடத்தினாங்க பா...“தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, கிட்டத்தட்ட ரெண்டு மாசமாகுது... இதனால, அவங்க நியமிச்ச தற்காலிக பணியாளர்களுக்கு ரெண்டு மாசமா சம்பளம் வரல பா...“தற்காலிக ஊழியர்களுக்கு எந்த கணக்குல சம்பளம் வழங்குறதுன்னு தெரியாம அதிகாரிகள்முழிக்கிறாங்க... 'சம்பளம் வருமா, வராதா'ன்னு தற்காலிக ஊழியர்களும் தவியா தவிக்கிறாங்க... இவங்க வேலையை விட்டு நின்னுட்டா, ஊராட்சிகள்ல குடிநீர் பிரச்னை, சுகாதார பிரச்னைகள் தலைதுாக்கும்னு அதிகாரிகள் பயப்படுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.“தண்டனை வாங்கியும், திருந்தல வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“வட சென்னையில், மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கிற ஏரியா பெண் போலீஸ் அதிகாரியை தான் சொல்லுதேன்... புகார் குடுக்க வர்றவங்க மற்றும் எதிர் தரப்புன்னு ரெண்டு பேரிடமும், 'பஞ்சாயத்து' பண்ணி, பெரும் தொகையை கறந்துடுதாங்க வே...“குட்கா பொருட்கள் விற்பனை பண்றவங்களிடமும் வசூல் நடக்கு... இவங்க வசூலுக்கு, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்புல இருக்கிற சிலர் உதவியா இருக்காவ வே...“சமீபத்துல, ஒரு நில பிரச்னையில் பாதிக்கப்பட்டவங்களுக்கு பணத்தை திருப்பி வாங்கி குடுத்தாங்க... அதுல ஒரு தொகையை கமுக்கமா கறந்துட்டாங்க... இவங்க ஏற்கனவே வேலை பார்த்த இடத்துல, 'போக்சோ' வழக்கு போடுவேன்னு தனியார் டாக்டர்கள் ரெண்டு பேரை மிரட்டி, 12 லட்சம் ரூபாயை வசூல் பண்ணிட்டாங்க...“அந்த வழக்குல கைதாகி, 'சஸ்பெண்ட்' ஆனாங்க... திரும்ப இங்க பணிக்கு வந்தும், பழைய வசூல் வேட்டையை தொடருதாங்க வே...” என முடித்தார், அண்ணாச்சி.ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “அன்னகிறிஸ்டி மேடம் சொல்லுங்க... வீட்டு விசேஷம் நல்லபடியா முடிஞ்சுதா...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.