உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வசூலிப்பது ரூ.3 கோடி; செலவழிப்பது ரூ.1 கோடி?

வசூலிப்பது ரூ.3 கோடி; செலவழிப்பது ரூ.1 கோடி?

மசாலா டீயை பருகியபடியே, ''போலீசாரை அலைய விட்டுட்டாங்க பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''திண்டுக்கல்ல, ஒரு சூப்பர் மார்க்கெட்ல திருடிய ரெண்டு பேரை, வடக்கு போலீசார் பிடிச்சாங்க... அவங்களை கோர்ட்ல ஆஜர்படுத்தி, திண்டுக்கல் ஜெயில்ல அடைக்க கூட்டிட்டு போனாங்க பா...''அப்ப ஒரு திருடன், 'சார், நான் பெண்ணா மாறிட்டேன்... என்னை ஆண்களோட அடைக்காதீங்க'ன்னு சொல்லி இருக்காரு... அதை நம்பாத போலீசார், திண்டுக்கல் ஜெயில்ல அடைச்சுட்டு போயிட்டாங்க பா...''ஆனா, ரெண்டு நாள் கழிச்சு, வடக்கு போலீசாரை தொடர்பு கொண்ட ஜெயில் அதிகாரிகள், 'அந்த கைதியை மதுரை மத்தியபெண்கள் சிறைக்கு கூட்டிட்டு போயிடுங்க'ன்னு சொல்லிட்டாங்க... போலீசாரும், கைதியை மதுரை சிறைக்கு கூட்டிட்டு போனப்ப, அங்க இருந்த அதிகாரிகள், 'இவர் ஆணா, பெண்ணான்னு அரசு மருத்துவமனையில் 'செக்' பண்ணி, சான்றிதழ் வாங்கிட்டு வாங்க'ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க... பாவம் போலீசார், நொந்து போயிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அமோகமா விற்பனை நடக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிபகுதியில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனைசக்கை போடு போடுது... லாட்டரி வியாபாரிகள் மஞ்ச பையை கையில் வச்சுக்கிட்டு, துண்டு சீட்டுல ரகசியமா நம்பர்களை எழுதி குடுத்துடுதாவ வே...''சாயந்தரம் 3:00 மணிக்கு பரிசு விபரத்தை வெளியிடுதாவ... இந்த லாட்டரிகளை வாங்க மாவட்டம் முழுக்க இருந்து ஏழை, எளிய தொழிலாளர்கள் நிறைய பேர் வர்றாவ வே...''யாரும் பெரிய அளவுல பரிசு வாங்கிட்டு போற மாதிரி தெரியல... கைப்பணத்தை இழந்து கவலையோட போறாவ... இது, போலீசாருக்கு தெரிஞ்சாலும், கரெக்டா, 'கட்டிங்' போயிடுறதால கண்டுக்க மாட்டேங்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பஸ் பயணியர் நொந்து போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை, கிளாம்பாக்கத்துல சி.எம்.டி.ஏ., சார்புல, புது பஸ் ஸ்டாண்ட்கட்டியிருக்கால்லியோ... இதன் பராமரிப்பு மொத்தத்தையும், சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருத்தரின் தயவுல, புனேவை சேர்ந்த மூணு எழுத்து கம்பெனிக்கு குத்தகைக்கு விட்டிருக்கா ஓய்...''இந்த கம்பெனியோட தமிழக பொறுப்பாளர் வச்சது தான், பஸ் ஸ்டாண்ட்லசட்டம்... இங்க இருக்கறகடைகள், ஹோட்டல்கள், தங்குமிடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம்னு எல்லாத்துக்கும், வாடகை மற்றும் கட்டணமா மாசம், 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பண்றா ஓய்...''ஆனா, பராமரிப்புதான் படுமோசமா இருக்கு... இங்க, துாய்மை பணிக்கு,462 பேரை நியமிக்கறதாசொல்லி தான், 'டெண்டரை'யே எடுத்திருக்கா... ஆனா, துாய்மை பணியில ஈடுபடறது வெறும், 90 பேர் தான் ஓய்...''இதனால, எங்க பார்த்தாலும் குப்பை, கூளமா கிடக்கறது... கழிப்பறைகள் தண்ணீர் இல்லாம, 'கப்' அடிக்கறது... கடைகள், ஹோட்டல் குப்பையை சரியா அள்ளாம தேங்குது...''இதை பார்த்துட்டு, 'கம்பெனி வசூல் பண்ற, 3 கோடியில, 1 கோடியாவது பராமரிப்புக்கு செலவு செய்வாளா'ன்னு பயணியர் புலம்பிட்டே போறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''பேட்ரிக், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 29, 2024 16:56

பாவம் போலீஸ் வேலைக்கு சேர்ந்த தலையெழுத்து, கைதியை gender டெஸ்ட்க்கு அழைத்துச்செல்லும் வரை ஆட்டி வைக்கிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை