பில்டர் காபியை பருகியபடியே, ''ஸ்டேஷன்ல ஹோமம் நடத்தியிருக்கா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில்இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார்னு 30க்கும் மேற்பட்டோர் டூட்டி பார்க்கறா... சமீபத்தில், இவா லிமிட்ல பல நுாறு லிட்டர் கள்ளச்சாராயத்தை பிடிச்சா ஓய்...''இதுல கைதானவா பத்தி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காம, ரகசிய இடத்துல வச்சு, 'டீலிங்' பேசிட்டு, சில நாட்கள் கழித்து கைது கணக்கு காட்டியதா புகார்கள் வந்துது... இதுதவிர, கஞ்சா, குட்கா புழக்கம், திருட்டு, வழிப்பறின்னு இவா ஏரியாவுல, 'கிரைம் ரேட்' ஏறிண்டே போறது ஓய்...''இதுக்காக, உயர் அதிகாரிகள் கூப்பிட்டு, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியிருக்கா... இதனால, சமீபத்துல கார்த்தால விடியும் முன்பே, ஸ்டேஷன் கதவுகளை சாத்திட்டு, சிறப்பு ஹோமம் நடத்தியிருக்கா ஓய்...''அதாவது, 'நம்ம ஏரியாவுல குற்றங்கள் குறையணும்... உயர் அதிகாரிகள் கண்டிப்புல இருந்து தப்பிக்கணும்'னு தான் இந்த ஹோமத்தை நடத்தியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வனத்துறை அலட்சியத்தால, தண்ணீர் வீணா போகுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சிகள் ஜருகுமலை அடிவாரத்தில் இருக்கு... இந்த ரெண்டு ஊராட்சிகள்லயும், 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள், 100 நாள் வேலை உறுதி திட்டத்துல பதிவு பண்ணியிருக்காங்க பா...''ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழை நீர், ஓடை வழியா போகுது... 100 நாள் வேலை திட்டம் மூலம், இந்த மழை நீரை அடிவாரத்துல தேக்க, புதுசா குளம் தோண்ட ஊராட்சி நிர்வாகங்கள் முடிவு பண்ணுச்சு பா...''ஆனா, வனத்துறையினர் அனுமதி தர மறுத்துட்டாங்க... அதே சமயம், வனத்துறையினரும் மழை நீரை தேக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால, மழைநீர் வீணா போகுது பா...'' என்றார், அன்வர்பாய்.''ஆளுங்கட்சியினர் மேல வழக்கு போடாம இழுத்தடிக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊருல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''திருப்பூர் மாவட்டம், உடுமலை பக்கம், எலையமுத்துார்ல இருக்கிற ஒரு மூதாட்டிக்கு 3.50 கோடி ரூபாய் மதிப்புல, 3.75 ஏக்கர் நிலம் இருந்துச்சு... நிலத்தை அடமானம் வச்சு பணம் வாங்கி தர்றதா சொல்லி, ஆளும் கட்சியை சேர்ந்த ஊராட்சி முக்கிய புள்ளி மற்றும் உடுமலை நகராட்சி கவுன்சிலரின் கணவர்னு ரெண்டு பேர், சமீபத்துல மூதாட்டியை அழைச்சிட்டு போயிருக்காவ வே...''ஆனா, சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரைய பத்திரம் தயார் பண்ணி, மூதாட்டியிடம் கையெழுத்து வாங்கி, நிலத்தை அபகரிச்சுட்டாங்களாம்... இது சம்பந்தமா, ரெண்டு பேர் மேலயும் திருப்பூர் கலெக்டர் மற்றும் போலீசாரிடம் மூதாட்டி புகார் குடுத்திருக்காங்க வே...''ஆனா, ஆளுங்கட்சியினர் மேல நடவடிக்கை எடுத்தா, அதிகாரிகள் கதி அதோ கதியாகிடுமுல்லா... அதனால, புகார் மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.