உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!

வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!

''சீனியாரிட்டிபஞ்சாயத்துல நியமனங்கள் தள்ளி போகுது வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''தமிழகத்துல மதுரை, தேனி, வேலுார், கள்ளக்குறிச்சி உட்பட, 13 அரசு மருத்துவக் கல்லுாரிகள்ல முழு நேர டீன்களே இல்ல... ஏப்., 30க்கு பிறகு, இங்கல்லாம் சீனியர் டாக்டர் தான், பொறுப்பு டீனா இருக்காவ வே...''இந்த பொறுப்பு டீன்கள்ல பலரும் நாளையோட ஓய்வுல போறாவ... 'டீன்களுக்கான சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கிறப்ப, புதியவர்களையும் அதுல சேர்க்கணும்'னு சில டாக்டர்கள் போர்க்கொடி துாக்கியதால, நியமனங்கள் லேட்டாயிட்டு வே...''இப்ப, டீன்கள் நியமனம் தாமதம் சம்பந்தமா ஐகோர்ட்ல பொதுநல வழக்கே தாக்கலாயிட்டு... 'முதல்வரும் அமெரிக்கா போயிட்டதால, டீன்கள் நியமனம் இன்னும் தாமதமாகும்'னு பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''குத்தகையை ரத்து செய்யணும்னு கேட்கிறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.''எந்த இடத்தை, யாருக்கு வே குத்தகைக்கு குடுத்தாவ...'' என கேட்டார், அண்ணாச்சி.''திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்துல, தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான பல ஏக்கர்நிலத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அரசிடம் இருக்குது... இந்த நிலத்துல, 80 வருஷமா தலைமுறை தலைமுறையா, சில குடும்பங்கள் வாழ்ந்துட்டு இருக்குது பா...''இவங்க, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுறதா கோர்ட்ல தொடர்ந்திருக்கிற வழக்குகள் நிலுவையில இருக்கு... இப்படி, பல சட்ட சிக்கல்ல சிக்கியுள்ள இந்த இடத்தை, சமீபத்துல அரசு குத்தகைக்கு விட்டுடுச்சு பா...''அரசு கட்டுப்பாட்டில் இருக்கிற டிரஸ்ட் நிலங்கள்ல, சட்ட சிக்கல் ஏதும் இல்லாம இருந்தால் தான் குத்தகைக்கு விடணும்கிறது விதி... ஆனா, அதை மீறி குத்தகைக்கு குடுத்திருக்காங்க... இதனால, 'குத்தகையை ரத்து செய்யணும்'னு அங்க குடியிருக்கிறவங்க, அரசிடம் முறையிட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மாநகராட்சிக்கு கோடிக்கணக்குல இழப்பு ஏற்படுதுங்க...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அந்தோணிசாமி.''எந்த ஊருல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''திண்டுக்கல் மாநகராட்சி ஏரியாவுல இருக்கும் குடியிருப்புகள், கடைகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குறாங்க... இந்த பணிகளை, 'டெண்டர்' எடுத்திருக்கிற கான்ட்ராக்டர்கள், ஏகப்பட்ட முறைகேடுகளை செய்றாங்க...''அதாவது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாம, குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்களுக்கு முறைகேடா பாதாள சாக்கடை இணைப்புகளை குடுத்திருக்காங்க... சமீபத்துல மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுத்தப்ப, 500 இணைப்புகள் கணக்குலவராம இருந்தது தெரியவந்துச்சுங்க...''ஆனா, கணக்கு எடுத்ததோட சரி... அப்புறமா, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க... இந்த மாதிரி முறைகேடு இணைப்புகளுக்கான கட்டணம் வராம, மாநகராட்சிக்கு கோடிக்கணக்குல வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''அவங்க சொந்த பணமா இருந்தா தான் அதிகாரிகள் கவலைப்படுவா... மக்களின் வரிப்பணம் தானேன்னு அசால்டா இருக்கா போல ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை