உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சொந்த காசில் சூனியம் வைத்த காங்., பிரமுகர்கள்!

சொந்த காசில் சூனியம் வைத்த காங்., பிரமுகர்கள்!

ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''பதவிகளை வாரி வழங்கப் போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தி.மு.க.,வுல, நகராட்சி மற்றும் பேரூராட்சி களில், 15 வார்டுக்கு மேல இருந்தா அங்க ரெண்டு செயலர்களை நியமிக்க தலைமை திட்டமிட்டிருக்கு பா...''தமிழகத்துல, 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்குது... இதுல, 15 வார்டுக்கு ஒரு நகர மற்றும் பேரூர் செயலர்னு பதவி வழங்க முடிவு பண்ணியிருக்காங்க பா...''இதன் வாயிலா, கட்சியினருக்கு கூடுதலான பதவிகள் கிடைக்கும்... பதவிகள் வாங்கிய இவங்க, தங்களது வார்டு கள்ல, தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகளை வாங்குறதுக்கு தீயா வேலை பார்ப்பாங்கன்னும் தலைமை நம்புது பா...'' என்றார், அன்வர்பாய்.''முதல்வருக்கு புகார் போயிடுச்சுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு, சென்னை பக்கம் பையனுார்ல, 99 ஏக்கர் நிலத்தை 2008ல் நடந்த தி.மு.க., ஆட்சியில கம்மி விலையில் குத்தகைக்கு ஒதுக்குனாங்களே... 2011 - 21 அ.தி.மு.க., ஆட்சியில இந்த திட்டத்தை கண்டுக்காம விட்டுட்டாங்க...''இப்ப, திரும்பவும் அந்த நிலத்தை திரைத்துறையினருக்கு குடுத்துட்டாங்க... இடையில, பழனிசாமி ஆட்சி நடந்தப்ப, தென்னிந்திய திரைப்பட ஊழியர் சங்க கூட்டமைப்பு சேகரித்த நிதியில், பையனுார்ல எம்.ஜி.ஆர்., பெயரிலும், அடுத்து ஜெ., பெயரிலும் ரெண்டு ஸ்டூடியோக்களை திறந்தாங்க... ''இந்த ஸ்டூடியோக்கள்ல சினிமா மற்றும் 'டிவி' சீரியல் படப்பிடிப்புகள் நடக்குதுங்க...''இதுக்கு வாடகையும் வசூலிக்கிறாங்க... 'இந்த வாடகை கணக்கு வழக்கு களை சரியா பராமரிக்கலை'ன்னு திரைப்பட தொழிலாளர்களில் ஒருபிரிவினர் குற்றம் சொல்றாங்க... அதுவும் இல்லாம, 'சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்ட அரசு ஒதுக்கிய நிலத்துல, வணிக ரீதியான எந்த கட்டடமும் கட்டக்கூடாதுன்னு அரசாணையில குறிப்பிட்டிருக்கு... ''அதை மீறி கட்டிய ஸ்டூடியோக்களுக்கு சீல் வைக்கணும்'னு முதல்வர் ஸ்டாலினுக்கு அவங்க புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட கதையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை மாத்தியே தீரணும்னு, 15 மாவட்ட தலைவர்கள் டில்லிக்கு படையெடுத்து போனாங்கல்லா... ஆனா, அவங்களை பார்க்க மேலிட தலைவர்கள் மறுத்துட்டாவ வே...''இந்த 15 பேர்ல மூணு பேர், 'நாங்க செல்வப்பெருந்தகையை மாத்த சொல்லி டில்லிக்கு போகல... மாவட்ட தலைவர்களை மாத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு தான் டில்லிக்கு போனோம்'னு, 'அந்தர்பல்டி' அடிச்சுட்டாவ வே...''ஏன்னா, சில மாவட்ட காங்., தலைவர்கள் மீது போலீஸ்ல பல வழக்குகள் இருக்கு... கட்சி பதவியை பாதுகாப்பு கேடயமா காட்டித்தான் தப்பிச்சிட்டிருக்காவ... அந்த பதவியும் பறிபோயிட்டுன்னா, கம்பி எண்ண வேண்டி வருமேன்னு பயந்துட்டாவ வே...''இந்த, 15 பேரையும் டில்லிக்கு அழைச்சுட்டு போற செலவுகளை திருநெல்வேலி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் இருவர்தான் செஞ்சிருக்காவ... டில்லி பயணம் தோல்வியில முடிஞ்சுட்டதால, 'வெட்டியா செலவு பண்ணிட்டோமே'ன்னு புலம்பிட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 28, 2025 06:34

காங்கிரஸ் என்றாலே அடுத்தவர் காலை வாருவது, எட்டு தலைவர்கள் ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் செய்வதெல்லாம் கட்சியின் இலக்கணமாயிற்றே


புதிய வீடியோ