“பஞ்ச பாண்டவர்களை பார்த்து பயப்படுதாவ வே...” என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கணபதிபாளையத்தில், துாத்துக்குடியை சேர்ந்த சகோதரர்கள் அஞ்சு பேர், குடும்பத்துடன் குடியிருக்காவ... மளிகை, மீன் கடைகள் நடத்துற இவங்க, மதுபானம், குட்கா பொருட்களையும் சட்டவிரோதமா விற்பனை பண்ணுதாவ வே...“இதுக்காக அஞ்சு பேரும் கைதாகி, சமீபத்துல தான் ஜாமின்ல வந்தாவ... வந்த பிறகும், போலீசார் ஆதரவுடன் அதே தொழிலை மறுபடியும் செய்யுதாவ வே... நேர்மையான போலீசார் யாராவது, இவங்களிடம் சோதனைக்கு போனா, அவங்களை மிரட்டுதாவ வே... “அவங்களும், 'நமக்கு எதுக்கு வம்பு'ன்னு போயிடுதாவ... இதனால, அஞ்சு பேரும் போதை விற்பனையில கொடிகட்டி பறக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.“கடும் மன உளைச்சல்ல இருக்கா ஓய்...” என, அடுத்த தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தலைமை பெண் செவிலியர் ஒருத்தர் இருக்காங்க... இவங்க, தனக்கு கீழ் பணிபுரியும் செவிலியர்களை படுத்தி எடுக்கறாங்க ஓய்...“மருத்துவமனை ரூல்ஸ்கள் எதையும் தலைமை செவிலியர் மதிக்கறதே இல்ல... அவங்களா சில ரூல்ஸ்களை உருவாக்கி, அதன்படி தான் நடக்கணும்னு செவிலியர்களை மிரட்டறாங்க ஓய்...“உதாரணமா, 'செவிலியர்கள் எல்லாரும் வீட்டுல இருந்து வர்றச்சயே யூனிபார்ம் போட்டு தான் வரணும்'னு சொல்றாங்க... அதை கேட்காதவங்களை கடுமையான வார்த்தைகள்ல திட்டறாங்க... ''இதனால, மன உளைச்சல்ல தவிக்கற 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவமனை இணை இயக்குநர்கிட்ட புகார் குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல பா...” என்றார், குப்பண்ணா.“சாக்கு பைகள்ல முறைகேடு பண்றாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“சென்னையில், 254 ரேஷன் கடைகள்ல இருந்தும் காலி சணல் சாக்கு பைகளை, கூட்டுறவு மற்றும் உணவு துறையின் ராயப்பேட்டை கிடங்குக்கு அனுப்புவாங்க... இந்த பைகளை, மாவட்ட விலை நிர்ணய குழு நிர்ணயிக்கிற விலைக்கு விற்பனை செய்றது வழக்கம் பா...“கடந்த மூணு வருஷமா, ரேஷன் கடைக்காரங்க நல்லா இருந்த சாக்கு பைகளை அனுப்பியிருக்காங்க... ஆனா, கிடங்குல இருக்கிறவங்க, அவை எல்லாம் கிழிஞ்சு போன, 'டேமேஜ்' சாக்குகள்னு கணக்கு எழுதியிருக்காங்க பா...“நல்ல சாக்கு பைகளை ரெண்டு தனியார் நிறுவனங்களுக்கு, தலா 20 ரூபாய் வீதமும், டேமேஜ் சாக்கு பைகளை தலா 5 ரூபாய் வீதமும் விற்பனை செய்திருக்காங்க... இப்படி, டேமேஜ் சாக்கு பைகளை கம்மி விலையில் விற்கிறதுக்கு, விலை நிர்ணய குழுவிடம் முன் அனுமதியும் வாங்கல பா...“இந்த வகையில, ஒரு சாக்குக்கு 15 ரூபாய் வீதம், மூணு வருஷமா பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருக்கு... 'இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தணும்'னு கூட்டுறவு துறை கூடுதல் தலைமை செயலருக்கு, கூட்டுறவு தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் அனுப்பியிருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.