உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.3 கோடி டெண்டரை மொத்தமாக அள்ளிய பிரமுகர்!

ரூ.3 கோடி டெண்டரை மொத்தமாக அள்ளிய பிரமுகர்!

“அ ரசு பள்ளி மாணவர்களை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா. “யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய். “முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தறால்லியோ... இதுல, 'அரசு பள்ளி மாணவர்கள் நிறைய பேர் கலந்துக்கணும்'னு அதிகாரிகள் கட்டாயப்படுத்தறா ஓய்... “அதே நேரம், இந்த போட்டிகள் மாவட்ட தலைநகரங்கள்ல தான் நடக்கறது... இதுக்காக, தொலைதுாரத்துல இருந்து மாணவர்கள் வர்றதுக்கு மற்றும் உணவுக்குன்னு பள்ளிக்கல்வி துறையோ, விளையாட்டு மேம்பாட்டு ஆணையமோ எந்த பணமும் தர்றது இல்ல ஓய்... “சில உடற்கல்வி ஆசிரியர்கள், தங்களது சொந்த செலவுல மாணவர்களை அழைச்சுண்டு போறா... ஏற்கனவே, பள்ளிக்கல்வி துறை நடத்துற விளையாட்டு போட்டிகளுக்கும் பயணப்படி தராததால, அரசு பள்ளி மாணவர்கள் பலர், முதல்வர் கோப்பை போட்டிக்கு பதிவு செய்திருந்தாலும் கலந்துக்காம இருந்துடறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “அதிகாரிகளின் வீட்டு வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “தஞ்சாவூர் குருங்குளத்தில், அரசுக்கு சொந்தமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, 200 ஏக்கர்ல இருக்கு... இதுல, 25 ஏக்கரை புதிய ரக கரும்பு பயிர்கள் சாகுபடி சோதனைக்கு ஒதுக்கியிருக்காங்க... “இதுக்காக நிரந்தரமா, 25 தோட்ட பணியாளர்கள் வேலை பார்க்கிறாங்க... கடந்த சில வருஷங்களா, புதிய கரும்பு பயிர்கள் சோதனை செய்யும் பணிகளை அதிகாரிகள் கிடப்புல போட்டுட்டாங்க... வெறும் அரை ஏக்கர்ல மட்டுமே சோதனை முயற்சியா கரும்பு பயிரிடுறாங்க... “இதனால தோட்ட பணியாளர்களை, ஆலையின் உயர் அதிகாரிகள், தங்களது வீட்டு வேலைகளுக்கு அனுப்பிடுறாங்க... அதிகாரிகளிடம் கேட்டா, 'தண்ணீர் பிரச்னை இருக்கிறதால கரும்பு பயிரிட முடியலை'ன்னு மழுப்புறாங்க...” என்றார், அந்தோணிசாமி. “டெண்டர் பஞ்சாயத்தை பேசி தீர்த்துட்டாரு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய். “துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில், சமீபத்துல, 3 கோடி ரூபாய் மதிப்பிலான பெயின்டிங் வேலைக்கான டெண்டர் விட்டாவ... இதை எடுக்க கடுமையா போட்டி இருந்துச்சு வே... “இதுல, கம்மியான தொகைக்கு டெண்டர் கேட்ட கான்ட்ராக்டர் வீட்டை சிலர் சூறையாடிட்டாவ... இது சம்பந்தமா, ஆளுங்கட்சி தொண்டரணி நிர்வாகி மீது போலீஸ்ல புகார் குடுத்தாவ வே... “கடைசியில, அந்த கான்ட்ராக்டரே போட்டியில் இருந்து விலகுறதா எழுதி குடுத்துட்டாரு... இதன் பின்னணியில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி புள்ளி ஒருத்தர் இருக்காரு வே... “சில வருஷங்களா டெண்டர் விவகாரங்கள்ல ஒதுங்கியிருந்த இவர், இப்ப துறையின் முக்கிய புள்ளி ஆசியுடன் மறுபடியும் களத்துல குதிச்சிருக்காரு... போட்டியா டெண்டர் கேட்ட ரெண்டு கான்ட்ராக்டர்ல ஒருத்தருக்கு, 3 லட்சம் ரூபாயும், இன்னொருத்தருக்கு, 15 லட்சம் ரூபாய்க்கு வேற டெண்டரும் வாங்கி தர்றதா உறுதி தந்து, தனக்கு வேண்டியவருக்கு, 3 கோடி ரூபாய் டெண்டரை வாங்கி குடுத்துட்டாரு வே...” என முடித்தார், அண்ணாச்சி. “வாரும் பூபதி...” என, நண்பரை வரவேற்று குப்பண்ணா கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 17, 2025 18:45

கல்வித்துறையும், விளையாட்டுத் துறையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக எந்த துரும்பையும் தூக்கிப் போட மாட்டார்கள்.துறை வேலையைத்தவிர மற்ற வேலையை கவனிக்கவே அவர்களுக்கு நேரமில்லையே...


முக்கிய வீடியோ