உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  விதிகளை மீறி வீட்டுமனைகளை விற்கும் நிறுவனம்!

 விதிகளை மீறி வீட்டுமனைகளை விற்கும் நிறுவனம்!

''மு தல்வர் தொகுதியிலயே இப்படி இருந்தா எப்படிங்க...?'' என்ற ஆதங்கத்துடன் பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி. ''அங்க என்னவே பிரச்னை...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''முதல்வர் ஸ்டாலின், சென்னை, கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வா இருக்காருல்ல... இந்த தொகுதியில் வர்ற சென்னை மாநகராட்சி, 6வது மண்டலத்துல உள்ள வார்டுகளின் பூங்கா பராமரிப்பு பணிகளை, கடந்த மூணு வருஷமா தனியார் நிறுவனத்திடம் குடுத்திருந்தாங்க... ''அந்த நிறுவனத்துல பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சலுகைகள் எல்லாம் தரணும்கிறது மாநகராட்சியின் நிபந்தனை... ஆனா, எந்த சலுகையும் தரலைங்க... ''அதுவும் இல்லாம மாசம், 18,000 ரூபாய் சம்பளம்னு சொல்லிட்டு, கையில, 10,564 ரூபாய் தான் தர்றாங்க... 'முதல்வர் தொகுதியில நடக்கிற இந்த மோசடி, அவருக்கு தெரியுமா'ன்னு தொழிலாளர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''மூணாவது முறையா சீட் கிடைக்குமான்னு கவலைப்படுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவரா இருக்கிறவர், கார்த்திக்... தி.மு.க., நகர செயலராகவும் இருக்காரு பா... ''வர்ற தேர்தல்ல, செங்கல்பட்டு தொகுதியில நிற்க முயற்சி எடுத்துட்டு இருக்காரு... கரூர்ல நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவுல, சிறந்த நகர செயலர் விருதை இவருக்கு குடுத்தாங்க பா... ''மாற்று கட்சியினர் பலரை தி.மு.க.,வுக்கு இழுத்துட்டு வந்து, உதயநிதியிடமும் நல்ல பெயர் வாங்கி வச்சிருக்கார்... அதே நேரம், ஏற்கனவே ரெண்டு முறை செங்கல்பட்டு, எம்.எல்.ஏ.,வா ஜெயிச்சிருக்கிற வரலட்சுமி, கார்த்திக் எழுச்சியால தனக்கு சீட் கிடைக்குமான்னு கவலையில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''விதிகளை மீறி வீட்டு மனைகளை விக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''ரியல் எஸ்டேட் தொழில் தானே இப்படி கொடிகட்டி பறக்கு... மேல சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி. ''துாத்துக்குடியில், 100 வருஷத்துக்கும் மேலா இயங்கிய பிரபல ஸ்பின்னிங் மில், போன வருஷம் உற்பத்தியை நிறுத்திடுத்து... இதன் தொழிலாளர்கள், பண பலன்களை கேட்டு, கோர்ட்ல வழக்கு போட்டிருக்கா ஓய்... ''இந்த சூழல்ல, மில்லுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தை, சமீபத்துல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வித்திருக்கா... இடத்தை வாங்கிய நிறுவனம், அங்க எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாம, சென்ட் 25 லட்சம் ரூபாய்னு விற்பனையை துவங்கிடுத்து ஓய்... ''வீட்டு மனைகளுக்கான, டி.டி.சி.பி., 'அப்ரூவல்' வாங்காமலும், மனைகளா பிரிக்காமலும் விதிகளை மீறி விற்பனை நடக்கறது... ஏற்கனவே இந்த நிறுவனம் துாத்துக்குடியில் நடத்திண்டு இருக்கற, 'மால்' கட்டுமானத்திலும் எந்த விதிகளையும் பின்பற்றல... ''இப்ப, ரியல் எஸ்டேட் தொழில்லயும் விதிமீறல்ல ஈடுபடறதால, 'இதன் பின்னணியில ஆளுங்கட்சியினர் பினாமியா இருப்பாளோ'ன்னு துாத்துக்குடி மக்கள் சந்தேகப்படறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ''வேலவன் சார், இங்கன உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
நவ 15, 2025 11:32

மரம் கனியை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. கொட்டை விழுந்தால்தானே புதிய செடி வளரும்.


D.Ambujavalli
நவ 15, 2025 06:46

தூத்துக்குடி எம். பி. அம்மாளின் ஆசீர்வாதம் இல்லாமலா இத்தனை துணிச்சல் அவர்களுக்கு வரும்?


சமீபத்திய செய்தி