உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  த.வெ.க.,வில் சங்கமிக்க தயாராகும் அ.தி.மு.க., மாஜி!

 த.வெ.க.,வில் சங்கமிக்க தயாராகும் அ.தி.மு.க., மாஜி!

நாளிதழை மடித்தபடியே, “மக்கள் மீதான சுமையை குறைப்பாரான்னு எதிர்பார்க்கிறாங்க பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். “விளக்கமா சொல் லுங்க...” என கேட்டார், அந்தோணிசாமி. “தமிழகத்துல, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் தான் சொத்து பத்திரங்களை பதிவு பண்ணிட்டு இருந்தாங்க... அரசுக்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால, கடந்த ஒன்றரை வருஷமா வழிகாட்டி மதிப்பை விட, 20 சதவீதம் நிலங்களின் மதிப்பை அதிகரிச்சு, பத்திரங்களை பதிவு பண்ணிட்டு இருக்காங்க பா... “இதுக்கு அதிகாரபூர்வமா எந்த உத்தரவும் போடாம, முந்தைய தி.மு.க., அரசின் வாய்மொழி உத்தரவு மூலமா பணிகள் நடந்துச்சு... இப்ப ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறதால, மக்களுக்கான சுமையை குறைக்கும் வகையில், பழையபடி வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவுகளை செய்ய, முதல்வர் விஜய் உத்தரவு போடணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க பா...” என்றார், அன்வர்பாய். “அதிகாரி பத்தி ஊழியர்கள் புகார் அனுப்பியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி. “எந்த துறையில வே...” எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாதிரி, வனத்துறையில ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் நிறைய பேர் இருக்காங்க... ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஐ.எப்.எஸ்., அதிகாரியா இருந்த ஒருத்தர், இப்ப சென்னைக்கு இடமாறுதலாகி வந்துட்டாருங்க... “இவர், சத்தியமங்கலத்தில் இருந்தப்ப, புலிகள் திட்ட நிதியை கையாண்டதுல ஏகப்பட்ட முறைகேடுகளை பண்ணிட்டாரு... வனத்துறை சம்பந்தப் பட்ட பணிகளை, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதிலும் நிறைய தில்லுமுல்லு பண்ணியிருக்காருங்க... “அங்க இருந்த ஊழியர்களையும் தரக்குறைவா நடத்தியிருக்காரு... இதுவரை அமைதியா இருந்த அந்த ஊழியர்கள், இப்ப ஆட்சி மாறிட்ட தால, 'சத்தியமங்கலத்துல நடந்த முறைகேடு கள் சம்பந்தமா விசாரணை நடத்தி, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்'னு முதல்வர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி. “யோகேஷ் குலால் இப்படி உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, “கட்சி மாற தயாராகிட்டார் ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்... “அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கிய அம்மா உணவகங்களை மேம்படுத்த, முதல்வர் விஜய் உத்தரவு போட்டி ருக்காரோல்லியோ... முன்னாள் எம்.எல்.ஏ., வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன், இதுக்காக முதல்வர் விஜயை பாராட்டி வாழ்த்து தெரிவிச்சிருக்கார் ஓய்... “அதோட, மதுரை கோ.புதுார்ல இருக்கற அம்மா உணவகத்துக்கு போய், அங்க என்னென்ன மாற்றங்கள் செஞ்சுருக்காங்கன்னு ஆய்வு பண்ணியிருக்கார்... அங்க சாப்பிட வந்த சிலர், 'உங்க கட்சி பொதுச் செயலர் பழனிசாமியை விஜய் சந்திச்சு வாழ்த்து பெறல... அதனால, விஜயை நீங்க பாராட்டறதை, உங்க கட்சியினர் ஏத்துப்பாளா'ன்னு கேட்டிருக்கா ஓய்... “அதுக்கு சரவணன், 'விஜய் தேர்தல்ல ஜெயிச்சிட்டாரு... மக்கள் மனசை வெல்வாரான்னு பொறுத்திருந்து பார்க்கணும்... அதே நேரம், மக்களுக்கான நல்ல விஷயங்களை பாராட்டுறதுல தப்பில்ல'ன்னு சொல்லிட்டு நழுவிண்டார்... 'இதை எல்லாம் கூட்டி கழிச்சு பார்க்கறப்ப, த.வெ.க., பக்கம் போக டாக்டர் முடிவு பண்ணிட்டார்'னு மதுரை அ.தி.மு.க., வினர் பேசிக்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 22, 2026 08:32

இப்படி நாலு பிட்டை போட்டு வைப்பதில் தான் ஆரம்பிக்கும் மெல்ல மெல்ல ஒட்டிக்கொள்ள இது ஒரு யுக்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை