குடிநீர் குறித்த புகார்கள் மீது கூடுதல் கவனம் ஆலந்துார் மண்டலகுழு கூட்டத்தில் வலியுறுத்தில்
ஆலந்துார், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவிக் கமிஷனர் முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:* அமுதப்பிரியா - தி.மு.க., - 159வது வார்டு: வார்டில் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாண்டியன் தெரு, அண்ணா தெருவில் புதிய கழிப்பறைகள் விரைவில் கட்டப்பட வேண்டும். * துர்காதேவி - தி.மு.க., - 167வது வார்டு: வார்டில் மரங்கள் அதிகம் உள்ளதால், அடிக்கடி மரக்கிளைகள் அகற்ற வேண்டியுள்ளது. அதற்கான உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.மந்த கதியில் நடக்கும் பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றும் பணியை விரைப்படுத்த வேண்டும். பணி முடித்த இடங்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும். * தேவி - தி.மு.க., - 164-வது வார்டு: வார்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும். சுகாதார மையத்தையும் விரைவில் திறக்க வேண்டும். * பிருந்தாஸ்ரீ - தி.மு.க., - 160வது வார்டு: வார்டில் உள்ள அம்மா குடிநீர் மையத்தை பாராமரித்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். புதுத்தெரு பூங்காவில் உபகரணங்கள், நடைபாதையை சீரமைக்க வேண்டும். மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண, ஐந்து இடங்களில் மின் மாற்றி அமைக்க வேண்டும்.* பூங்கொடி ஜெகதீசன் - தி.மு.க., - 163வது வார்டு: விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை அமைக்கும்படி ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வருகிறேன். பாலகிருஷ்ணாபுரத்தில் திருமண மண்டப கட்டுமான பணியை விரைவில் துவக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மழைநீர் வடிகால் பணி முறையாக மேற்கொள்ளவதில்லை. * செல்வேந்திரன் - தி.மு.க., - 156வது வார்டு: வார்டில் உள்ள குளத்தை சுற்றி விளக்குகள் பொறுத்தாததால், இரவில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிடுகிறது. பல வீடுகளுக்கு பழைய ஊராட்சி வரி, புதிய மாநகராட்சி வரி என, இரண்டு வரி வருகிறது. இதை சீரமைக்க வேண்டும்.மீட்கப்பட்ட, 70 சென்ட் இடம் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காத வகையில், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.* சாலமோன் - தி.மு.க., - 162வது வார்டு: வார்டின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வரும் மழை காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.* மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியதாவது:கவுன்சிலர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும். கோடை காலம் என்பதால் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குறித்து அதிக புகார்கள் வருகின்றன.அத்துறை அலுவலர்கள், தினமும் அவரவர் வார்டில் ஆய்வு செய்ய வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக வரும் புகார்கள்மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரிய பணிகளை வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.***