உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 3 ஆட்சிகளிலும் பதவி நீட்டிப்பு வாங்கி அசத்தும் அதிகாரி!

3 ஆட்சிகளிலும் பதவி நீட்டிப்பு வாங்கி அசத்தும் அதிகாரி!

பெஞ்சில் அமர்ந்ததுமே, “வேலை ஒதுக்குறதுல அரசியல் தலையீடுகள் இருக்கு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பல ஊராட்சி ஒன்றியங்கள்ல, மத்திய அரசின் 150 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் ஒதுக்கீடு பண்றதுல, அரசியல் தலையீடு அதிகமாகிட்டே போகுது... இதுவரை, அந்தந்த ஊராட்சி செயலர்கள் பெயர்ல வேலை உத்தரவு வழங்கி, உள்ளூர் தொழிலாளர்களை வச்சு பணிகள் நடந்துச்சு வே... “இப்ப, த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள், ஆளுங்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள்னு பலரும், ‘நாங்க பரிந்துரைக்கிற வேலைகளை தான் செய்யணும்... நாங்க சொல்றவங்களுக்கு தான் வேலையும் தரணும்’னு ஒன்றிய அதிகாரிகளுக்கு நெருக்கடி தர்றாவ வே... “இதனால, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தர முடியாத நிலை ஏற்படுது... ‘மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னையை தீர்த்து வைக்கணும்’னு ஒன்றிய அதிகாரிகள் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “போலீசாரிடமே, ‘கட்டிங்’ கேட்டு மிரட்டுறாரு பா...” என்றார் அன்வர்பாய். “யாருங்க அந்த தைரியசாலி...” என கேட்டார் அந்தோணிசாமி. “துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எஸ்.பி., தனிப்பிரிவு அதிகாரி ஒருத்தர் இருக்காரு... இவர், ‘டி.எஸ்.பி., மற்றும் எஸ்.பி., ஆபீசை எல்லாம் கவனிக்கணும்’னு சொல்லி, போலீஸ் ஸ்டேஷன்கள்ல மாதந்தோறும், ‘கட்டிங்’ கேட்டு மிரட்டுறாரு பா... “நடந்து முடிஞ்ச தீபாவளி பண்டிகைக்கு செமத்தியா வசூல் வேட்டை நடத்திட்டாரு... தனியார் கல்லுாரி விருந்தினர் மாளிகையை தன் கட்டுப்பாட்டுல இவர் வச்சிருக்கிறாரு பா... “அங்க உயர் அதிகாரிகளை தங்க வச்சு, ‘கவனிச்சு’ அனுப்புறதால, இவரது வசூல் வேட்டையை அவங்களும் கண்டுக்கிறது இல்ல... அதேநேரம், இவரது வசூல் விவகாரங்கள் எல்லாம் உயர் அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் புகாரா போயிடுச்சு... இதனால, ‘இவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும்’னு, சக போலீசார் எல்லாம் சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய். “சேர்மராஜ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற குப்பண்ணாவே, “ஏழாவது வருஷமா பதவியில் நீடிக்கறார் ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்... “சென்னை மாநகராட்சியில் முதுநிலை சட்ட அதிகாரின்னு ஒரு பதவி இருக்கு... இதுல இருந்து, 2020ல் ஓய்வு பெற்றவர், வருஷா வருஷம் பதவி நீட்டிப்பு வாங்கிண்டே இருக்கார் ஓய்... “முதல் பதவி நீட்டிப்பை அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கியவர், அடுத்த அஞ்சு வருஷ தி.மு.க., ஆட்சியிலும் பதவி நீட்டிப்பு வாங்கிண்டே இருந்தார்... த.வெ.க., அரசு வந்த பிறகு, இவரை வீட்டுக்கு அனுப்பிடுவான்னு பார்த்தா, இந்த அரசிலும் பதவி நீட்டிப்பு வாங்கி, ஏழாவது வருஷமா அதே பதவியில் நீடிக்கறார் ஓய்... “எந்த ஆட்சி வந்தாலும், தன் துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சரை பார்த்து, அவாளுக்கு வேண்டியதை கச்சிதமா பண்ணி குடுத்து, தன் பதவியை காப்பாத்திக்கறார்... இவரை மாதிரி பழைய அதிகாரிகளே முக்கிய பதவிகளை ஆக்கிரமிச்சிட்டு இருக்கறதால, இளைய அதிகாரிகள் பலரும் அந்த பதவிக்கு வர முடியாம பாதிக்கப்படறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா. “ஜேக்கப் ராஜன், நாளைக்கு பார்க்கலாம் பா...” என, செல் போனில் சொல்லியபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
நவ 16, 2026 20:44

இளைய. தலை. முறையினருக்கு. வேலைவாய்ப்பு. என்பதே. இல்லாமல். இவர்கள். 80. வயதுவரை. நங்கூரம். இட்டுக்கொண்டிருப்பார்கள் என்றால். இளையபாரதம் வந்து. நாட்டைத். தூக்கிப்பிடித்து. கனவாகவே. போய்விடும்


Moorthy sri
நவ 16, 2026 14:52

இந்த ஸ்டோரி நியூஸ் உண்மையா அண்ட் சரியா சொல்லுங்க. ஆதாரம் எப்படி போடுறீங்க .


Mohan Uma
நவ 16, 2026 07:05

மதுரை மாநகராட்சி சட்ட அலுவலராக செயல்பட உள்ளாட்சி துறை 2013 ஆம் வருட தணிக்கை ரிப்போர்ட்டில் தடை விதிக்கப்பட்ட அதே நபரே 13 ஆண்டுகளாக தணிக்கை தடை இருந்தும் இன்று வரை மதுரை மாநகராட்சி சட்ட அலுவலராக சட்ட விரோதமாக பணியில் தொடர்கிறார்.


Lakshminarasimhan
நவ 16, 2026 06:37

அதிகார மய்யம் என்னை தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லி வாக்கு பெற்ற விஜய் இப்போ பல அதிகார மையங்களை உருவாக்கி அதில் தன் கட்சி நிர்வாகிகளையும் புகுத்தி அதிகாரம் செய்வதாலேயே ஆட்சிக்கு அவ பெயர்


புதிய வீடியோ