ட பராவில் நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''பேரை மட்டும் குடுங் கோன்னு சொல்லி, கணக்கு காட்டியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை வருஷா வருஷம், பள்ளி, கல்லுாரிகள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்னு அஞ்சு பிரிவுகள்ல நடத்தறால்லியோ... ''மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள், வர்ற 25ம் தேதி துவங்கி, செப்., 10ம் தேதி வரை நடக்கறது... இதுக்கான பதிவு, போன ஜூலை 14ல் துவங்கி, ஆக., 20ல் முடிஞ்சது ஓய்... ''துணை முதல்வர் உதயநிதி தான், விளையாட்டுத் துறைக்கும் அமைச்சர் என்பதால, அவரது முயற்சியால விளையாட்டு வீரர்கள் - வீராங்கனையர் தமிழகத்துல அதிகரிச்சிருக்கான்னு கணக்கு காட்ட, மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் முடிவு பண்ணியிருக்கா ஓய்... ''இதுக்காக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரிடம், 'நீங்க போட்டியில கலந்துக்காம போனாலும் பரவாயில்ல... சும்மா பெயரை மட்டும் பதிவு பண்ணிடுங்கோ'ன்னு சொல்லி, நிறைய பேரை பதிவு பண்ணி வச்சிருக்கா... பெயர் தந்தவாள்ல எத்தனை பேர் மைதானத்துக்கு வந்து விளையாடுவான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''முதல் கட்ட தொகையை அனுப்பிட் டாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''எதுக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாசம் தானே இருக்கு... இதுல, ஆளுங்கட்சிக்கு சாதகமான வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி வழங்க திட்டமிட்டிருக்காங்க... ''தேர்தல் நேரத்துல, இதுக்கான பணத்தை மொத்தமா அனுப்பினா, தேர்தல் கமிஷன் அதிகாரி களிடம் சிக்கிடுமே... அதனால, 20 முதல் 30 தொகுதிகளுக்கான பணத்தை இப்பவே ஒரு இடத்துல சேகரிச்சு வைக்கிறாங்க... ''இதுக்கான பணத்தை முதல் கட்டமா அனுப்பிட்டு இருக்காங்க... இந்த தகவல் அமலாக்கத் துறைக்கும் கிடைச்சிருக்கு... அதனால தான், மூத்த அமைச்சர் மற்றும் அவருக்கு நெருங்கியவங்க வீடுகள்ல, சமீபத்துல அதிரடி சோதனை நடத்தியதா ஆளுங்கட்சியினரே பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஆளுங்கட்சியினரா இருந்தாலும், 'கட்டிங்' வெட்டுனா தான் காரியம் நடக்கும் வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி. ''யாருங்க அந்த அதிகாரி...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''கோவை மாவட்ட கலால் துறை அதிகாரியை தான் சொல்லுதேன்... டாஸ்மாக் பார் அல்லாத எப்.எல்., - 2 வகை மதுபான பார்களுக்கு, இவரது பரிந்துரையில் தான், கலெக்டர் ஆபீஸ்ல உரிமம் தருவாவ வே... ''இந்த உரிமத்துக்கு விண்ணப்பிக்கிறது, ஆளுங்கட்சி புள்ளிகளா இருந்தாலும், 'கட்டிங்' வாங்காம கையெழுத்து போட மாட்டாரு... இவருக்கு கட்டிங்கை வெட்டி, ஏகப்பட்ட எப்.எல்., - 2 பார்களை பலரும் திறந்துட்டே இருக்காவ வே... ''உதாரணத்துக்கு, கோவை தடாகம் சாலை, கோவில்மேடு பகுதியில் மட்டும், 1 கி.மீ., சுற்றளவில் ஆறு பார்கள் செயல்படுது... இப்ப, ஏழாவது பார் திறக்கவும் அனுமதி வழங்கிட்டாரு வே... ''இதுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சு கலெக்டருக்கு புகார் அனுப்பியும் பலன் இல்ல... 'கலால் அதிகாரியால, அரசுக்கு தான் கெட்ட பெயர்'னு ஆளுங்கட்சியினரே புலம்புதாவ வே...'' என்ற அண்ணாச்சி, ''முருகேசன், கிளம்புதோம்...'' என, நண்பரிடம் விடைபெற்றபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.