பாதாள சாக்கடை பணியின் போது குழாய் உடைப்பு 2 மாதங்களாக குடிநீர் இன்றி தவிக்கும் அனகாபுத்துார்
அனகாபுத்துார், பாதாள சாக்கடை பணியின் போது, குடிநீர் குழாயை உடைத்ததோடு, அதை சரிசெய்யாமல் பள்ளத்தை மூடியதன் காரணமாக, அனகாபுத்துாரில், இரண்டு மாதங்களாக குடிநீர் இன்றி, பல பகுதியினர் அவதியடைந்து வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில், குழாய் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்பட்டு, பள்ளத்தை சரியாக மூடாததால், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். லேசான மழை பெய்தாலே, சாலைகள் புதைக்குழிகளாக மாறி, வாகனங்கள் சிக்கிக் கொள்வதும், நெரிசல் ஏற்படுவதும் தொடர்கிறது. மற்றொரு புறம், இப்பணியின் போது சாலைகளில் செல்லும் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டன. அதை சரிசெய்யாமல் பள்ளத்தை மூடியதால், இரண்டு மாதங்களாக குடிநீர் இன்றி, பல பகுதியினர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து, அனகாபுத்துார்வாசிகள் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டினால், அதை முறையாக மூடுவதில்லை. திரும்பிய இடமெல்லாம் புழுதி பறப்பதால் பம்மல், அனகாபுத்துார் பகுதிக்குள் செல்வதற்கே அச்சமாக உள்ளது.சாலைகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க, பள்ளம் தோண்டும் போது, குடிநீர் குழாயை உடைக்கின்றனர். தவறுதலாக உடைத்தால், அதை சரிசெய்வது அவர்களின் பணி.ஆனால், அப்படி செய்யாமல், மண்ணை கொண்டு அடைத்துவிடுகின்றனர். 'டம்மி' போட்டு மூடிவிடுகின்றனர். இதனால், அனகாபுத்துாரில் உள்ள 1-4 வார்டுகளில், காமாட்சி நகர், வெங்கடேஸ்வரா நகர், அண்ணா நகர், கஸ்துாரிபாய் நகர், எம்.ஜி.ஆர்., நகர்களில், இரண்டு மாதங்களாக குடிநீரின்றி, மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதிகளில், மாநகராட்சி சார்பில், லாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும், வாரம், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்கின்றனர். இப்பகுதிகளில் குழாய் உடைக்கப்பட்ட இடங்களை விரைவாக கண்டறிந்து, அதை சரிசெய்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, ஒன்றாவது மண்டல உதவி செயற்பொறியாளர் சத்தியசீலனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:அனகாபுத்துாரில் உள்ள நான்கு வார்டுகளில், குடிநீர் குழாய் உடைக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து, ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். இதுவரை, 35 இடங்களில் சரிசெய்யப்பட்டுள்ளது. அதுவரை, வார்டுக்கு ஒரு லாரி என்ற அடிப்படையில், நான்கு வார்டுகளுக்கும் தடையின்றி லாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில், அனைத்து இடங்களும் சரிசெய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.