''கால் கடுக்க நிற்க வச்சு கடுப்பேத்திட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.,வுல அடங்கிய நாலு சட்டசபைதொகுதிகளின் ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை,மாவட்டச் செயலரும், அமைச்சர் பொன்முடியின்மகனுமான கவுதம சிகாமணி, சமீபத்துல கூட்டியிருந்தாருங்க...''இதுல, மாவட்ட, நகர,ஒன்றிய, கிளை நிர்வாகிகள்,பாக முகவர்கள்னு, 4,000பேர் கலந்துக்கிட்டாங்க...கூட்டம் முடிஞ்சதும், நீண்ட வரிசையில் அவங்களை நிற்க வச்சு,கவுதம சிகாமணி அழைப்பிதழ் ஒண்ணை குடுத்திருக்காருங்க...''அதாவது, பொன்முடி எழுதிய, 'திராவிடர் இயக்கமும் கருப்பர் இயக்கமும்' என்ற நுாலைவர்ற 25ம் தேதி, சென்னையில் முதல்வர்ஸ்டாலின் வெளியிடுறாருங்க... 'இந்த விழாவுக்குஎல்லாரும் வரணும்'னு சொல்லி, அழைப்பிதழ் குடுத்திருக்காருங்க...''இதனால, 'இந்த அழைப்பிதழை,'வாட்ஸாப்'லயே அனுப்பியிருக்கலாமே...இப்படி, கால் நோகுற அளவுக்கு நிற்க வைக்கணுமா'ன்னு கட்சியினர் புலம்பிட்டே போய் சேர்ந்தாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தொகுதி பக்கமே வர மாட்டேங்காரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யார் ஓய் அது...'' எனகேட்டார், குப்பண்ணா.''துாத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தொகுதிஎம்.எல்.ஏ.,வா, காங்கிரஸ் கட்சியின் அமிர்தராஜ் இருக்காரு... 'சென்னையில குடியிருக்கிற இவர், தொகுதிக்கு அடிக்கடி வர்றதே இல்ல'ன்னு மக்கள் புகார் சொல்லுதாவ வே...''கட்சியிலும், தெற்கு மாவட்ட தலைவர் பதவியில இருக்காரு... 'சென்னையிலயே இருக்கிறதால, கட்சி பணிகளையும் சரியா செய்றது இல்ல'ன்னு தொண்டர்களும்புலம்புதாவ வே...''அதுவும் இல்லாம, 'பிரமாண்டமா நடக்கும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா காலத்துலகூட, தொகுதிக்குள்ள தலைகாட்ட மாட்டேங்காரு... ஹிந்து மக்களை புறக்கணிக்கிறாரு'ன்னு சமூக வலைதளங்கள்லசிலர் குற்றம் சாட்டுதாவ... ''எம்.எல்.ஏ., தரப்போ, 'அப்படி எல்லாம் இல்ல...பா.ஜ.,வினர் தான் இந்தமாதிரி அபாண்டமான குற்றச்சாட்டுகளை பரப்புதாங்க'ன்னு சொல்லுது வே...'' என்றார், அண்ணாச்சி.''மாறுவேடத்துல வலம்வரா ஓய்...'' என, கடைசிதகவலுக்கு கட்டியம் கூறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''தீபாவளி நெருங்கிட்டுஇருக்கறதால, அரசு அலுவலகங்கள்ல வசூல்வேட்டை தீவிரமாநடக்கறது... குறிப்பா, திண்டுக்கல் மாவட்டத்துல,'தீபாவளி அன்பளிப்பு' என்ற பெயர்ல அரசு அலுவலகங்கள்ல லட்சக்கணக்குல பணம் புழங்கறதா, லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு புகார்கள் போனது ஓய்...''இதனால, திண்டுக்கல்லஞ்ச ஒழிப்பு போலீசார்தனித்தனி குழுவா பிரிஞ்சு,அரசு அலுவலகங்கள்ல மாறுவேடத்துல கண்காணிப்பு பணியில ஈடுபட்டிருக்கா... மக்களோட மக்களா கலந்து, தீபாவளி பரிசுன்னு யாராவது கை நீட்டறாளான்னு கண்கொத்தி பாம்பா கவனிக்கறா ஓய்...''அதுவும் இல்லாம,'யாராவது அரசு அலுவலகத்துல லஞ்சம் கேட்டா, தகவல் தாங்க'ன்னு கிராமம் கிராமமா போய், தங்களது போன் நம்பர்களையும் குடுத்துட்டு வரா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் புதியவர்கள்அமர, பெரியவர்கள் எழுந்தனர்.