கடற்கரை - வேளச்சேரி ரயில் இன்று ஓடும்
சென்னை, சென்னை எழும்பூர் -- கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் -- கடற்கரை வரை 4வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள், கடந்தாண்டு ஆகஸ்டில் துவக்கப்பட்டன.இதனால், சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை, கடந்தாண்டு ஆக., 27ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக மேம்பால பாதையில் செல்லும் பயணியர் அவதிப்பட்டனர். ஓராண்டு கடந்தும், 4வது பாதை பணி முடியாததால், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், சென்னை கடற்கரை- - வேளச்சேரி இடையே நேரடி மேம்பால ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்குகிறது. முன்பு 120 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. இன்று முதல் இரு மார்க்கமாகவும் 90 ரயில் சேவை இயக்கப்படுகிறது. எஞ்சியுள்ள சில பணிகள் முடிந்த பின், முழுமையாக ரயில் சேவை துவக்கப்படும்.