மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025
''ம துரையில, மூர்த்தி தான் கொடி கட்டி பறக்குதாருவே...'' என, பெஞ்ச் விவாதத்தை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த கட்சிங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ''தி.மு.க., அமைச்சர் மூர்த்தியைத் தான் சொல்லுதேன்... அவரோட தொகுதி, மதுரை கிழக்கு... 'மசமச'ன்னு நின்னிட்டிருக்காம, தொகுதியில புகுந்து பொறப்படுதாரு... குடியிருப்பு சங்கங்கள், அப்பார்ட்மென்ட்களுக்கு நேரா போயி, அங்கேயுள்ள நிர்வாகிகளிடம் பேசி, 'உங்களுக்கு வேணுங்கிறதை நான் செய்யிதேன்...'ன்னு கேட்டு, செ ஞ்சு குடுக்காரு... ''இதோட நிக்கலே... மதுரை வடக்கு தொகுதி எல்லைக்கப்பால இருக்கிற மேற்கு சட்டசபை தொகுதியிலயும், 'ரவுண்டு' கட்டுதாரு... ராப்பகல் பார்க்காம, ஒவ்வொரு அப்பார்ட்மென்ட்டா ஏறி இறங்கி, குசலம் விசாரிச்சு, 'நான் வந்திருக்கேன் நல்லது செய்ய...'ன்னு இதமா பேசி, பதமா ஓட்டை அள்ளப் பாக்காரு வே... ''இந்த குடியிருப்பு மக்கள் வைக்கிற கோரிக்கைகளை நிறைவேற்ற தனிக் குழு அமைச்சு, உடனுக்குடன் செஞ்சு குடுக்காரு... வீட்டுக்கு வீடு டிபன் பாக்ஸ் வினியோகத்தையும் கனகச்சிதமா நடத்திட்டு வர்றாரு வே...'' எனக் கூறினார் அண்ணாச்சி. ''ஜாதியே வேணாம்ன்னு, முதல்வர் ஸ்டாலின் சொல்லிட்டிருக்காரு... திருச்சி சிறையில, ஜாதி தான் கொடிகட்டிப் பறக்குது பா...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அன்வர்பாய். ''ஜாதி ேவணாம்ன்னு, மேலுக்கு தான் சொல்வாங்க... உள்ளுக்குள்ளே யார் அதுக்கு ஒத்துக்கிறாங்க... விஷயத்தைச் சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி. ''திருச்சி மத்திய சிறையில, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிக்கும் குழுவோட பொறுப்பு ஆபீசர் அவர்... இவரோட சமுதாயத்தைச் சேர்ந்தவங்க சிலர் சிறைக்குள்ளே இருக்காங்க... அவங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு, தன் சமுதாய கைதிகளுக்கு ஆதரவா இவரு செயல்படுறதா தகவல் கசிஞ்சிருக்கு பா... ''இதனால கைதிகள் மோதல் அங்கே அதிகமாயிடிச்சு... சிறை கண்காணிப்பாளர் போஸ்டு காலியாகி, 11 மாசம் ஆச்சு... இன்னும் ஒருத்தரையும் போடக் காணோம் அங்கே... போட்டா தான், இந்த ஆபீசரோட கொட்டம் அடங்கும்ன்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய். ''யார் ஓய் அது... நம்ம கண்ணுசாமி மாதிரி இருக்கே...'' என, நெற்றியையும், கண்ணையும் சுருக்கி, தொலைவில் நோக்கினார் குப்பண்ணா. ''ஆமாம்... நம்மை அவர் கவனிக்கலை, விடுங்க... அடுத்த விஷயம் சொல்றேன் கேளுங்க... பெரிய அதிகாரிகள் விசாரணையில் சிக்குவாங்க போலிருக்கு...'' என, கடைசி தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி. ''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா. ''கட்டுமான திட்ட அனுமதி வழங்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இருக்கு... இதில் பெரிய அளவில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் தர்றதோட, கட்டமைப்பு திட்டங்களும் போடுவாங்க... இதில் ஒப்பந்தங்களை முடிவு செய்யிற வேலையில, கட்டுமான பிரிவு செயற் பொறியாளர், ஒரு 'சீப் பிளானர்'ன்னு ரெண்டு பேரும் பெரிய அளவில் 'கல்லா' கட்டிட்டாங்கன்னு புகார் எழுந்திருக்குங்க... ''இந்த புகார், சி.எம்.டி.ஏ., மெம்பர் செகரட்டரி கைக்கு வந்திருக்கு... இப்ப, அதிகாரிகள் கலங்கி நிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி. ''என் பால்ய சிநேகிதர்கள் ராஜன்பாபுவும், ருத்ரமூர்த்தியும், எங்காத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கா...'' என்றபடியே கிளம்பினார் குப்பண்ணா; மற்றவர்களும் நடையைக் கட்டினர்.
04-Nov-2025