உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மலையேறும் வாகனங்களை மடக்கும் வசூல் கூட்டாளிகள்!

மலையேறும் வாகனங்களை மடக்கும் வசூல் கூட்டாளிகள்!

''நடவடிக்கை எடுத்த பிறகும், அடுக்கடுக்கா புகார்கள் குவியுதுல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில்களுக்கு அதிகாரியா இருந்தவர், தமிழ் கடவுள் பெயர் கொண்டவர்... சில லட்சங்களை வாங்கிட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த, தடையில்லா சான்று வழங்கிய புகார்ல சிக்கி, போன வருஷம், 'சஸ்பெண்ட்' ஆகிட்டாரு வே...''சமீபத்துல நடந்த தணிக்கையில், கோவில் வரவு - செலவு கணக்கிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் தெரியவந்துச்சு... போன வருஷம் சிவராத்திரிக்கு பக்தர்களே கூட்டு வழிபாடு நடத்தியிருக்காவ... கோவில் சார்புல எந்த நிகழ்ச்சியும் நடத்தல வே...''ஆனாலும், கோவில் வளாகத்தில் தேவாரம், திருவாசகம் பாடுறதுக்கு ஏற்பாடு செய்த வகையில், 1.20 லட்சம் ரூபாய் செலவு கணக்கு எழுதியிருக்காவ... இந்த மாதிரி தோண்ட தோண்ட பல முறைகேடுகள் வெளிவருது... அதே நேரம், 'அதிகாரி மேல மட்டும் நடவடிக்கை எடுத்துட்டு, உடந்தையா இருந்தவங்களை விட்டுட்டாங்க'ன்னும் பக்தர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.அப்போது தான் வந்த குப்பண்ணா, ''நாயரே காபி வேண்டாம்... வர்றச்சே, நண்பருடன் சரவணபவன்ல சாப்பிட்டுட்டேன்...'' என்றபடியே, ''தெருக்களுக்கு தடுப்பு போடறா ஓய்...'' என்றார்.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை பிராட்வே பகுதியில் சேவியர் தெரு, பிடாரியார் கோவில் தெரு உள்ளிட்ட பல தெருக்கள்ல, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொழில், 50 வருஷமா நடக்கறது... இங்க இருக்கற லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள்ல கூலி தொழிலாளர்கள், கிளர்க்குகள், சரக்கு டெலிவரி ஊழியர்கள்னு, 1,000 பேருக்கு மேல வேலை பார்க்கறா ஓய்...''இப்ப, இந்த தெருக்களுக்கு தடுப்பு போடும் பணிகளை போக்குவரத்து போலீசார் துவங்கியிருக்கா... அதாவது, 'ராத்திரி மட்டும் தான் லாரிகள் வந்து போகலாம்... கார்த்தால, 8:00 மணிக்கு மேல எந்த லாரியும் நுழையப்படாது'ன்னு சொல்றா ஓய்...''இதனால, 'கூலி தொழிலாளர்களின் பிழைப்பு பாதிக்கப்படும்... தெருக்களுக்கு தடுப்பு போடறதை தடுக்கணும்'னு சென்னை கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்புல முதல்வருக்கு மனுக்கள் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ராத்திரி வசூல் கனஜோரா நடக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''நீலகிரி மாவட்டம், குன்னுார் போலீஸ் அதிகாரி ஒருத்தர், இரவு ரோந்து பணியில் இருக்கிறப்ப, மலை ஏறும் வாகனங்களை மறிச்சு, வசூல் வேட்டை நடத்துறாரு... இவருக்கு, வெலிங்டன் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர் கூட்டாளியா இருக்காரு பா...''ராத்திரி மலையேறும் லாரிகள், கார்களை நிறுத்தி, ஏதாவது குற்றம், குறை சொல்லி பணத்தை கறந்துடுறாங்க... மது போதையில வர்றவங்களை பிடிச்சு, 'கேஸ் போடுவோம்'னு மிரட்டியே, சில ஆயிரங்களை கறந்துடுறாங்க...''இதனால, மலை பகுதிக்கு வர்ற பல லாரி டிரைவர்கள், இரவு நேர பயணத்தை ரத்து பண்ணிட்டு, மலைக்கு கீழே ஓய்வெடுத்துட்டு, விடிஞ்ச பிறகு மலையேறுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''சதீஷும், கிருஷ்ணமூர்த்தியும் வரா... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி