உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கால்நடை துறையில் இடமாறுதலுக்கு கட்டிங் வசூல்!

 கால்நடை துறையில் இடமாறுதலுக்கு கட்டிங் வசூல்!

“ச மூக வலைதளத்துல புலம்பிட்டு இருக்காருப்பா...” என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அன்வர்பாய். “யாரை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி. “தி.மு.க., ஆட்சியில் உளவுத்துறை, சட்டம் - ஒழுங்குன்னு, 'பவர்புல்' பதவிகள்ல இருந்தவர், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம்... த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், 'டம்மி' பதவியான ஆவினின், 'விஜிலென்ஸ்' பிரிவுக்கு துாக்கியடிச்சிட்டாங்க பா... “சமீபத்துல இவர், தன் சமூக வலைதள பக்கத்துல ஒரு பதிவு போட்டிருக்காரு... அதுல, நேர்மையா இருந்தா மட்டும் போதாது... நேர்மையற்றவர்களை அடையாளம் காணும் அறிவும் அவசியம்... “கருணை, மனிதநேயம், நம்பிக்கை ஆகியவை ஒரு தலைவருக்கு அவசியமான பண்புகள்... அதோடு விவேகம், மனிதர்களை புரிந்துகொள்ளும் திறனும் இருக்கணும்னு சொல்லியிருக்காரு... இதை பார்த்த சக அதிகாரிகள், 'முதல்வர் விஜய்க்கு தான் இந்த பதிவை போட்டிருக்கார்'னு பேசிக்கிறாங்க பா...” என்றார் அன்வர்பாய். “மாவட்ட உயர் அதிகாரியை அதிரடியா மாத்திட்டாங்க வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “எந்த மாவட்டத்துல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவுக்கும், மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரியா இருந்தவருக்கும் சட்டசபை தேர்தலப்பவே முட்டல் மோதல் வந்துட்டு... கலெக்டர் கறாரா இருந்ததால, வருவாய் அதிகாரியால பெருசா, 'சம்பாதிக்க' முடியல வே... “இந்த சூழல்ல, தன் மகன் திருமண ஏற்பாடுகளுக்காக, வருவாய் அதிகாரி விடுப்புல போயிருந்தாரு... இந்த நேரத்துல, கலெக்டர் சென்னையில பேசி, வருவாய் அதிகாரியை அதிரடியா மாத்திட்டாங்க வே... “ஆனா, திருமணத்துக்கு முன்னாடியே அவருக்கு இடமாறுதல் வந்துட்டதால, நிறைய பேர் அந்த திருமணத்தை புறக்கணிச்சிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “முருகேசன், இப்படி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “கட்டிங் கேட்கிறாங்க...” என்றபடியே தொடர்ந்தார்... “தமிழகம் முழுக்க, மூணு வருஷம் ஒரே இடத்தில் பணி முடிச்ச கால்நடை டாக்டர்கள், தங்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் சீக்கிரம் கலந்துக்க இருக்காங்க... கணவர், மனைவியா வேலை பார்த்தா, அவங்களுக்கு ஒரே கோட்டத்துல பணியிடம் ஒதுக்க முன்னுரிமை தருவாங்க... “கால்நடை துறையின் முக்கிய பெண் புள்ளி, தன் உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் மூலமா, 'கணவன், மனைவி இருவரும் ஒரே கோட்டத்தில் பணியாற்ற விரும்பினா, ஒரு தொகையை வெட்டணும்... ''அதேபோல கால்நடை டாக்டர்களும், விரும்பிய ஊர்கள்ல பணிபுரிய குறிப்பிட்ட தொகை தரணும்'னு கேட்கிறாங்களாம்... ''போக்குவரத்து துறையிலும், ஆம்னி பஸ், 'அப்ரூவலுக்கு' ஒரு பஸ்சுக்கு, ரூ.2.65 லட்சம் வரை, அமைச்சருக்கும் சேர்த்துன்னு அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேக்குறாராம்... “முதல்வர் விஜய், 'என் ஆட்சியில யாரும், எதுக்கும் லஞ்சம் தர வேண்டாம்னு சொல்றாரு... ஆனா, இவங்க இப்படி கேட்கிறாங்களே'ன்னு எல்லாரும் குழம்பி இருக்காங்க...''என முடித்தார் அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “கமலி மேடம்... உமாசங்கர், சதீஷ்குமாரை கூட்டிட்டு கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுதேன்... பாஸ்கர பாண்டியா, நீ எந்த பஸ்ல போப்பற...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

giri d v
ஜூலை 14, 2026 08:58

Dear Sir, please use the first topic as the heading instead of the 3rd topic. It is very confusing. We will anyway read all the three topics. Thanks.


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2026 21:30

படிக்கிறது இராமயாணம் இடிக்கிறது பெருமாள் கோயில் என்பது போல் ஜோசப் விஜய் மேடையில் என் ஆட்சியில் லஞ்சமேயில்லை என்கிறார் ஆனால் எந்த துறையிலும் லஞ்சமில்லாமல் பைல் நகருவதில்லை. திமுக ஆட்சி போலவே இருக்கிறது. ஆமினி பஸ் பெர்மிட்க்கு மந்திரிக்கும் சேர்த்து வசூலா..??


duruvasar
ஜூலை 12, 2026 11:12

கள்ள பாஸ்போர்ட் கும்பலுக்கு துணைநின்றவர் நேர்மையை பற்றி குமுறுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறது.