உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆசை காட்டி மோசம் செய்ததா அரசு?

ஆசை காட்டி மோசம் செய்ததா அரசு?

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''ஆய்வுக்கு வந்து அலற வச்சுட்டாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற வருவாய் துறை அலுவலகங்களை ஆய்வு செய்றேன்னு, சென்னையில இருந்து பெண் அதிகாரி, குடும்ப சகிதமா வந்திருக்காங்க... தங்குறதுக்கு சொகுசு விடுதி, விதவிதமான உணவு ஐட்டங்களை ஏற்பாடு பண்ணும்படி, துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி குடுத்திருக்காங்க...''அதுலயும், ஒரு ஹோட்டல்ல இவங்க ஆர்டர் செய்த உணவு வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் லேட்டாயிடுச்சாம்... அதுக்கே அதிகாரிகள், ஊழியர்களை கடுமையா திட்டியிருக்காங்க...''ஆய்வு முடிஞ்சு ஊருக்கு கிளம்புறப்ப பாதாம், முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை கிலோ கணக்கில் வாங்கி தரும்படி கேட்டிருக்காங்க... வருவாய் துறையினரும், சில ஆயிரங்களை கடன் வாங்கி இந்த பொருட்களை வாங்கி குடுத்திருக்காங்க... இது பத்தி, தலைமை செயலர் வரைக்கும் புகார்கள் போயிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சேற்றில் மலர்ந்த செந்தாமரைன்னு சொல்லும்...'' என, யாரிடமோ மொபைல் போனில் பேசி வைத்தபடியே வந்த குப்பண்ணா, ''அசைக்க முடியாத சக்தியா இருக்கா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன்ல 2015ம் வருஷம் முதல், இப்ப வரைக்கும் ரெண்டு போலீசார் டூட்டியில இருக்கா... இடையில, எங்காவது இடம் மாத்தினாலும், 'டூயிங் டியூட்டி' என்ற பெயர்ல, இதே ஸ்டேஷன்ல ஆணி அடிச்சா மாதிரி உட்கார்ந்துக்கறா ஓய்...''இன்ஸ்பெக்டர் விசாரிக்கற முக்கிய வழக்கு சம்பந்தமான பைல்களை, எதிர் தரப்பு வக்கீல்களுக்கு எடுத்து குடுத்து, லட்சங்களை பார்த்துடறா... இவாளோட திரிசமன்களை கண்டுபிடிச்ச டி.எஸ்.பி., ரெண்டு பேரையும், அவாவா ஸ்டேஷன்களுக்கு போகும்படி சமீபத்துல உத்தரவு போட்டார் ஓய்...''ஆனா, ரெண்டு பேரும் எஸ்.பி., ஆபீஸ்ல இருக்கற அதிகாரியை நன்னா கவனிச்சு, தாங்கள் இப்ப வெவ்வேறு ஸ்டேஷன்ல பணிபுரிவது மாதிரி எஸ்.பி.,யிடம் விண்ணப்பம் குடுத்து, காங்கேயத்துக்கு, 'அபிஷியலா' இடமாறுதல் வாங்கிண்டுட்டா... இந்த தில்லாலங்கடி கூட்டணியை பார்த்து, மற்ற போலீசார் எல்லாம் வாயடைச்சு போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்குல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''போலீஸ் டிபார்ட்மென்ட்ல வி.ஆர்.எஸ்.,ல போறவங்க எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போச்சு... இதை தடுக்க, பணியில் சேர்ந்து 35 வருஷம் சர்வீஸ் முடிச்சிருந்தா, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க, அரசு முடிவு பண்ணுச்சு வே...''இதுக்கான பட்டியலையும், மாவட்ட வாரியா எடுத்து அனுப்பியிருக்காவ... தமிழகம் முழுக்க, 2,000க்கும் மேற்பட்டவங்க இன்ஸ்பெக்டராகும் ஆசையில, வி.ஆர்.எஸ்., முடிவை கைவிட்டுட்டு, காத்துட்டு இருந்தாவ வே...''ஆனா, பட்டியல் அனுப்பி வருஷம் ரெண்டாகியும் இன்னும் புரமோஷன் உத்தரவு வரல... 'நாமவி.ஆர்.எஸ்.,ல போறதை தடுக்கவே இப்படி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களோ'ன்னு பலரும் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 22, 2025 10:11

இந்த ஆடிட் , இன்ஸ்பெக் ஷன் என்று வருபவர்களைக் கண்டாலே அலுவலகங்களில் பேயடித்தமாதிரி முகங்கள் ஆகிவிடும் எங்கள் அலுவலகத்துக்கு வந்த ஒரு மஹாநுபாவர் ஏழெட்டு உயர்தர 'பாட்டில்களை'. - சுமார் 6000க்கு மேலிருக்கும் - வாங்கி பேட்டி வேறு சிறியதாக இருந்ததால் நல்ல உயர்தர American tourister லக்கேஜ் ஒன்றுடன் சென்றார் ஒவ்வொருவருக்கும் அவரவர் பதவிக்கேற்ப 500 லிருந்து 2000 வரை பழுத்தது. அவர் ஒரு வாரத்தில் டூட்டியில் இருந்தது 3 மணிநேரம் கூட இல்லை நல்ல பிசினஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை