உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பதவி நீட்டிப்புக்கு கல்வி அதிகாரி போடும் கச்சித பிளான்!

பதவி நீட்டிப்புக்கு கல்வி அதிகாரி போடும் கச்சித பிளான்!

''சீனியர் அமைச்சருக்கு, 'செக்' வச்சுட்டாருல்லா...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''துரைமுருகன் பதவி பறிப்பை சொல்றீங்களா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''இல்ல... நடப்பாண்டுக்கான, பிளஸ் 2 தேர்வு அட்டவணையை, 2024 அக்டோபர் 14ல் வெளியிட்டாவ... அப்பவே, '2025 மே 9ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்'னும் அறிவிச்சிருந்தாவ வே...''ஆனா, திடீர்னு ஒருநாள் முன்னதா, 8ம் தேதியே முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வெளியிட்டுட்டாரு... இது, சாதாரணமா தெரிஞ்சாலும், இதன் பின்னணியில, திருச்சியை சேர்ந்த சீனியர் அமைச்சர் நேருவுக்கும், மகேஷுக்கும் இடையிலான பனிப்போர் இருக்கு வே...''அதாவது, 9ம் தேதி, பிளஸ் 2 ரிசல்ட்னு நல்லா தெரிஞ்சும், அன்னைக்கு காலையில, திருச்சி பஞ்சப்பூரில், 900 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவுக்கு அமைச்சர் நேரு ஏற்பாடு பண்ணிட்டாரு... இதை, முதல்வர் ஸ்டாலின் தான் திறந்து வச்சாரு வே...''அன்னைக்கு ரிசல்ட் வெளியீடு இருக்கிறதால, மகேஷ் சென்னையில இருப்பாரு... திருச்சி விழாவுக்கு வர முடியாதுன்னு நேரு கணக்கு போட்டாரு... ஆனா, மகேஷ், 8ம் தேதியே ரிசல்ட்டை ரிலீஸ் பண்ணிட்டு, திருச்சிக்கு பறந்துட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''தினக்கூலியா இருந்தாலும், ஆபீசையே ஆட்டி படைக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியா இருக்கறதால, இங்க நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்துல உசந்துட்டே போறது... இங்க இருக்கும், சார் - பதிவாளர் ஆபீஸ்ல, தினமும், 100 பத்திரங்கள் வரை பதிவாறது ஓய்...''இந்த ஆபீசுக்கு மூணு வருஷமா நிரந்தர, சார் - பதிவாளர் இல்ல... வேற ஒருத்தர் தான் கூடுதல் பொறுப்பா கவனிக்கறார்... ஆனா, இங்க தினக்கூலி ஊழியரா ஒருத்தர் இருக்கார்... இவர் தான், எந்த பத்திரத்தை பதிவு பண்றதுக்கு, எவ்வளவு லஞ்சம் தரணும்னு, 'ரேட் பிக்ஸ்' பண்றார் ஓய்...''ஒட்டுமொத்த, சார் - பதிவாளர் ஆபீசே, இவரது கட்டுப்பாட்டுல தான் இருக்கு... இங்க தினமும் வசூலாகும் லஞ்ச பணம், அதிகாரிகள் வரைக்கும் போறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சதீஷ் தம்பி வராரு... சுக்கு காபி குடுங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''பணி நீட்டிப்புக்கு முயற்சிக்கிறாருங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...''தேனி மாவட்ட கல்வித்துறையில் ஒரு அதிகாரி, ஓய்வு பெறும் வரை சொந்த மாவட்டத்தை விட்டு நகர கூடாதுங்கிறதுல உறுதியா இருக்காருங்க... 'புரமோஷன்' வேண்டாம்னு சொல்லி, இருக்கிற இடத்தை விட்டு அசையவே இல்லைங்க...''வர்ற ஜூன் மாசம், இவருக்கு, 60 வயசு ஆகிறதால, பணி ஓய்வு பெறணும்... ஆனா, கல்வித்துறையில் ஆசிரியரா இருந்தா, அந்த கல்வியாண்டின் இறுதி நாளான மே 31 வரைக்கும் பணிபுரியலாம்னு விதி இருக்குதுங்க...''இதனால, இப்ப இருக்கிற அலுவலக உயர் பதவியை உதறிட்டு, ஏதாவது ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக துடிக்கிறாருங்க... ''அப்படி போயிட்டா, 2026 மே 31 வரைக்கும் சர்வீஸ்ல இருக்க முடியும்... இதுக்காக, துறையின் உயர் அதிகாரி தயவில் இவரை தலைமை ஆசிரியர் பணிக்கு மாத்த சத்தமில்லாம வேலைகள் நடக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''நேத்து, அமைதிப்படை படம் பார்த்தேன்... மணிவண்ணன் நடிப்பு சூப்பரா இருந்துச்சு வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sethusubramaniam
மே 12, 2025 22:03

அவரு மணிவண்ணன் இல்லே. மனி வண்ணன்


D.Ambujavalli
மே 12, 2025 04:08

ஆனமட்டும் அரசுப்பணியை ஆக்கிரமித்துக்கொண்டு, அடுத்தவர் நுழையவிடக்கூடாது என்று பறவாய் பறப்பதும், லஞ்சம் பெற்று அதை வழங்குவதுமாக இருந்தால் படித்து, பரீட்சை தேறிய ஆசிரியர்களின் காலம் விடியாமலே போய்விடும்


சமீபத்திய செய்தி