ரூ.25 லட்சத்தை திரட்ட துடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி!
'' இ ந்த கூட்டத்துலயாவது நம்ம கோரிக்கை நிறைவேறுமான்னு எதிர்பார்க்கிறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். ''சட்டசபை கூட்டத்தை தானே சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''ஆமா... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் அடிக்கடி போராட்டம் நடத்திட்டு இருக்காங்களே பா... ''இதுல, 'கொரோனா பணியில் ஈடுபட்டு, உயிரிழந்த அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கணும்... அப்படி உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தரணும் என்ற கோரிக்கைகளை கண்டிப்பா நிறைவேற்றியே ஆகணும்'னு கேட்கிறாங்க பா... ''அதுவும் இல்லாம, 'இப்ப நடக்கிற சட்டசபை கூட்டத்துல இது சம்பந்தமா அறிவிப்பு வரலைன்னா, புதுசா வர்ற ஆட்சி தான், எங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்'னு அரசு டாக்டர்கள், 'பொடி' வச்சு பேசுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''தனியா, 'வாட்ஸாப் குரூப்' துவங்கிட்டாருல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''கடந்த ஜூன் மாச கடைசியில, மதுரை கலெக்டரா பொறுப்பேற்றவர் பிரவீன்குமார்... தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டத்தையே பல மாசங்களா கல்வி அதிகாரிகள் நடத்தாத தகவலை கேள்விப்பட்டு, கலெக்டர் அதிர்ச்சியாகிட்டாரு வே... ''இதனால, கல்வித் துறைக்கு தனியா வாட்ஸாப் குரூப் ஒண்ணை இப்ப கலெக்டர் துவங்கியிருக்காரு... அதுல, சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்கள், வட்டார கல்வி அலுவலர்கள் எல்லாரையும் சேர்த்துட்டாரு வே... ''இவங்களுக்கு, 'அடிக்கடி பள்ளிகளுக்கு ஆய்வுக்கு போகணும்... அது சம்பந்தமான படங்களை குரூப்ல பதிவிடணும்'னு உத்தரவு போட்டிருக்காரு வே... ''அதோட, 'சும்மா படம் மட்டும் போட்டா போதாது... ஆய்வுல என்னென்ன விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டீங்க என்பதையும் விளக்கமா பதிவிடணும்'னு கறார் காட்டுதாரு... 'துாங்கிட்டு இருந்த கல்வி அதிகாரிகளை கலெக்டர் உசுப்பி விட்டிருக்கார்'னு அவரது ஆபீஸ் ஊழியர்கள் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''மெடிக்கல் சீட்டுக்காக, வசூல் வேட்டை நடத்தறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., நிர்வாகிகளுடன், 'ஒன் டூ ஒன்' சந்திப்பை நடத்திண்டு இருக்காரோல்லியோ... சட்டசபை தொகுதிவாரியா நிர்வாகிகள் குறித்த தகவல்களை, உளவுத்துறை வாயிலா வாங்கிண்டு தான், இந்த நேர்காணலை முதல்வர் நடத்தறார் ஓய்... ''திருச்சி மத்திய மண்டல உளவுத்துறை பெண் அதிகாரி, சில நிர்வாகிகள் பத்தி சாதகமா, 'ரிப்போர்ட்' அனுப்பி, அவாள்ட்ட, 'கட்டிங்' வாங்கிட்டாங்க... ஆனா, இவங்க கொடுத்த ரிப்போர்ட் தப்புங்கறது முசிறி, மணப்பாறை தொகுதி நிர்வாகிகள் நேர்காணல்ல அம்பலமாகிடுத்து ஓய்... ''அதுவும் இல்லாம, தஞ்சையைச் சேர்ந்த ஒரு லாட்டரி வியாபாரியிடம் லட்சக்கணக்குல, 'கட்டிங்' வாங்கியிருக்காங்க... 'பெண் அதிகாரி மகளை மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க, 25 லட்சம் ரூபாய் தேவைப்படறது... அதை திரட்டத்தான், இப்படி ஓடியாடி உழைக்கறாங்க'ன்னு, சக போலீசார் பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. தன் மொபைல் போனை பார்த்த அண்ணாச்சி, ''என் சிஸ்டர் உமா மெசேஜ் பண்ணியிருக்கா... வீட்டுக்கு போய் கண்ணாடியை மாட்டினா தான் படிக்க முடியும் வே...'' என, முணுமுணுத்தபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.