உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சரக்கு பெட்டக முனையத்தில் தீ ரூ.1 கோடி மதிப்பு வாகனம் நாசம்

சரக்கு பெட்டக முனையத்தில் தீ ரூ.1 கோடி மதிப்பு வாகனம் நாசம்

மணலிபுதுநகர், தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாகனம் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான, 600 கம்ப்யூட்டர் மானிட்டர்கள் எரிந்து நாசமாயின. மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் நெடுஞ்சாலையில், 'கைலாஷ் வேர் ஹவுஸ்' எனும் பெயரில் கன்டெய்னர் பெட்டிகளை கையாளும், சரக்கு பெட்டக முனையம் செயல்படுகிறது. இங்கு, நேற்று மதியம், கன்டெய்னர் சரக்கு பெட்டிகளை அடுக்கி வைக்கும் பணியில், 'கால்மர்' இயந்திர வாகனம் பயன்படுத்தப்பட்டது. அப்போது, கால்மர் இயந்திரத்தின் டியூப் திடீரென வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள், மளமளவென பற்றி எரிந்த தீயால், இயந்திரம் முழுதும் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும், அருகேயிருந்த கன்டெய்னர் பெட்டியிலும் தீப்பிடித்தது. அதில், 1,000 கம்ப்யூட்டர் மானிட்டர்கள் இருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கன்டெய்னர் பெட்டியில் இருந்த, 400 மானிட்டர்களை மீட்டனர். 600 மானிட்டர்கள் முழுதும் எரிந்து நாசமாயின. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கால்மர் இயந்திர வாகனமும் தீக்கிரையானது. சம்பவம் குறித்து, மணலிபுதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை