இ ஞ்சி டீயை உறிஞ்சிய படியே, “போலீசாருக்கு கண்டனங்கள் குவியுதுங்க...” என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய். “தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில், சாப்பாட்டுல பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கணவரை கொலை செய்த வழக்குல, அவரது மனைவி அம்முபி மற்றும் கள்ளக் காதலன் லோகேஸ்வரனை சமீபத்துல போலீசார் கைது செஞ்சாங்கல்ல... இந்த சம்பவம், மாநிலம் முழுக்க பரபரப்பா பேசப்பட்டதுங்க... “இந்த சம்பவம் தொடர்பா, அரூர் போலீஸ் ஸ்டேஷன்ல, அம்முபியிடம் பெண் போலீசார் வாக்குமூலம் வாங்குனாங்க... இதை வீடியோவுல பதிவும் செஞ்சாங்க... “ஆனா, இந்த வாக்குமூல வீடியோ, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள்ல பரவிடுச்சு... பெண் போலீசாரை மீறி இந்த வீடியோ பரவியிருக்க வாய்ப்பில்லை என்பதால, அவங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி. “மணல் கடத்தல் மாமூல் கதையை கேளுங்கோ ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “செங்கல்பட்டு பகுதி பாலாற்றில் ராத்திரி நேரங்கள்ல, 'டாடா ஏஸ்' வாகனங்கள்ல திருட்டுத்தனமா மணல் அள்ளிண்டு போறா... போன வாரம் இப்படி மணல் திருடிய இருவரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது பண்ணினா ஓய்... “ஸ்டேஷன்ல வச்சு அவாளிடம் விசாரணை நடத்தினப்போ, 'நாங்க ஒரு லோடு மணலை, 15,000 ரூபாய்க்கு விக்கறோம்... அதே நேரம், ஒரு லோடு மணலுக்கு போலீசாருக்கு, 3,000 ரூபாய் மாமூல் தந்துட்றோமே... உங்களுக்கு வரலையா சார்'னு அப்பாவியா கேட்டிருக்கா ஓய்... “நம்ம ஸ்டேஷன்ல யாரும் மணல் மாமூல் வாங்கறது இல்லையேன்னு அதிர்ச்சியான போலீசார், இது சம்பந்தமா விசாரணை நடத்தியிருக்கா... இதுல, வேற ஒரு ஸ்டேஷன் உளவுப்பிரிவுல இருக்கற ஒரு போலீஸ்காரர் மாமூல் வாங்கினது தெரிஞ்சது... இதை வெளியில சொன்னா டிபார்ட்மென்டுக்கு கெட்ட பேர்ங்கறதால, காதும் காதும் வச்சா மாதிரி அமுக்கிட்டா ஓய்...” என்றார், குப்பண்ணா. “பதவியிறக்கம் பண்ணியும் திருந்தல வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி. “யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய். “நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வான ராமச்சந்திரன், முதல்ல வனத்துறை அமைச்சரா இருந்தாரு... அப்புறமா, சுற்றுலா துறைக்கு மாத்தினாவ... அங்கயும் சொதப்பியதால, பதவியை பறிச்சு இப்ப அரசு கொறடாவா மட்டும் இருக்காரு வே... “இவர், தன் சொந்த கிராமத்துக்கு சில திட்டங்களை கொண்டு வந்தாரு... இதன்படி, 2 கோடி ரூபாய் மதிப் புல ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகத்தை தன் வீட்டு பக்கத்துலயே கட்டி, அதை முதல்வர் ஸ்டாலினும் திறந்து வச்சாரு வே... “ஆனா, திறந்து ஒரு வருஷமாகியும் சந்தை செயல்பாட்டுக்கு வரல... இப்ப, இவரது மருமகனின் தேயிலை தொழிற்சாலைக்கான குடோனா பயன்படுத்திட்டு இருக்காரு வே... “ இது தவிர, இவரது கிராமத்துல இருக்கிற நீராதாரங்கள் மற்றும் மரங்களை அழிச்சு, அரசு கல்லுாரி கட்டடத்தை இங்க கொண்டு வரவும் முயற்சி பண்ணிட்டு இருக்காரு... இதுக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எல்லாம் கடும் எதிர்ப்பு தெரிவிச்சு, கல்லுாரி இடத்தை மாற்றும்படி முதல்வருக்கு மனு அனுப்பிட்டு இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பி னர்.