இஞ்சி டீயை உறிஞ்சி யபடியே, ''சபாநாயகர் தொகுதியில், 100 சதவீதம் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிச்சிருக்காருங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளரா, 'மாஜி' எம்.எல்.ஏ.,வும், மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணனை, பழனிசாமி நியமிச்சிருக்காரு... இந்த மாவட்டத்துல நாங்குநேரி, ராதாபுரம் சட்டசபை தொகுதிகள் வருதுங்க...''நாங்குநேரி, ஏர்வாடியில் முஸ்லிம்கள் தான் அதிகம் இருக்காங்க... அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால, பூத் கமிட்டிக்கு இந்த ஊர்ல ஆட்கள் கிடைக்கலைங்க...''வக்ப் சட்டத்தை எதிர்த்து, ராஜ்யசபாவுல அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஓட்டு போட்ட விஷயத்தை சரவணன் விளக்கிச் சொன்னதும், பூத் கமிட்டியில் சேர்ந்திருக்காங்க...''சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியில், 100 சதவீதம் பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை தேர்வு பண்ணிட்டாரு... ''இந்த கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை திரட்ட உளவுத்துறை போலீசார் ரொம்பவே முயற்சி பண்ணியிருக்காங்க... அவங்களுக்கு பிடி கொடுக்காம, பட்டியலோட சரவணன், 'எஸ்கேப்' ஆகிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''என்கிட்டயும் பூத் கமிட்டி தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, தமிழகம் முழுக்க 70,000 பூத் கமிட்டிகளுக்கு உறுப்பினர்களை நியமிச்சுட்டா... கட்சி துவங்கிய பின் முதல் முறையா, இந்த மாச கடைசியில, விஜய் கோவை மாவட்டத்துக்குப் போறார் ஓய்...''கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 20,000 பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாட்டுல கலந்துக்க இருக்கார்... அந்த கூட்டத்துல, கட்சியின் அடுத்தகட்ட திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முதல்வரை சந்திக்கிற வாய்ப்பை தவற விட்டாரா, தவிர்த்துட்டாரான்னு பட்டிமன்றம் நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க., செயற்குழு உறுப்பினரான, சென்னை, பாலவாக்கம் சோமுவின் மனைவி வசந்தி உடம்பு சரியில்லாம சமீபத்துல இறந்து போயிட்டாங்க... அவரது மகள் டாக்டர் தமிழரசி, மாநகராட்சியின் 183வது வார்டு கவுன்சிலராகவும் இருக்காங்க வே...''பாலவாக்கம் சோமு, கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லாரிடமும் நல்லா பழகுவாரு... இதனால, அவர் மனைவிக்கு சீமான், திருமாவளவன்னு பலரும் வந்து அஞ்சலி செலுத்தினாவ வே...''அ.தி.மு.க., மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன், அஞ்சலி செலுத்திட்டு, வீட்டுக்குள்ள ஒரு அறையில இருந்திருக்காரு... அப்ப, முதல்வர் ஸ்டாலின் வந்து அஞ்சலி செலுத்திட்டுப் போனாரு வே...''முதல்வர் கிளம்பியதும்தான், அவர் வந்துட்டுப் போனதே, செஞ்சி ராமச்சந்திரனுக்கு தெரியும்னு அவரது ஆதரவாளர்கள் சொல்லுதாவ... ''ஆனா, 'ஒரு காலத்துல தி.மு.க.,வுல பலமான தலைவரா இருந்தவர் செஞ்சி ராமச்சந்திரன்... ம.தி.மு.க.,வுக்குப் போய், இப்ப, அ.தி.மு.க.,வுல இருக்கிற சூழல்ல, முதல்வர் சந்திப்பு வேண்டாம்னு தவிர்த்துட்டாரோ'ன்னு தி.மு.க.,வினர் முணுமுணுக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.