பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''வீட்டு வேலைக்கு அனுப்பிடுறாங்க...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாரை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கோவை மாநகராட்சி யில், ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் நிலைக்குழு தலைவர் ஒருத்தர் இருக்காங்க... இவங்க வீட்டுக்கு, தினமும் துாய்மை பணியாளர்களை அனுப்புறாங்க...''அவங்க, பெண் தலைவர் வீட்டை சுத்தம் செய்றது, துணி துவைக்கிறது, பாத்திரம் கழுவுற வேலைகளை எல்லாம் செய்றாங்க... பெண் தலைவரின் உதவியாளரா இருக்கிற ஒருத்தருக்கு, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்னு கணக்கு காட்டி, மாதம், 20,000 ரூபாய் குடுக்கிறாங்க...''பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய புள்ளி யும், பெண் தலைவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவங்க... ''இதனால, முக்கிய புள்ளியின் பெயரை பயன்படுத்தியே, ஊழியர்களை பெண் தலைவர் மிரட்டுறதால, சுகாதார மேற்பார்வையாளர்களும், துாய்மை பணியாளர்களும் மண்டலம் விட்டு மண்டலம் மாறுதல் கேட்டு அல்லாடிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''என் கிட்டயும் ஒரு மாநகராட்சி தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''பட்டுக்கு பிரசித்தி பெற்ற ஊரின் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில், தற்காலிக பெண் பணியாளர்கள் நிறைய பேர் வேலை பார்க்கறா... இவாளுக்கு, சுகாதார அதிகாரி ஒருத்தர் பாலியல் தொல்லை குடுக்கறார் ஓய்...''பெண் பணியாளர்களை தொட்டு பேசறதும், வீடியோ காலில் கூப்பிட்டு ஏடாகூடமா பேசுறதுமா இருக்கார்... இதை உயர் அதிகாரி களிடம் சொன்னா, வேலைக்கு ஆபத்து வந்துடுமோன்னு பெண் பணியாளர்கள் பயப்படறா ஓய்...''சில அதிகாரிகளுக்கு இது தெரிஞ்சும், கண்டுக்காம இருக்கா... 'மாநகராட்சி கமிஷனர் தான் இதில் நடவடிக்கை எடுக்கணும்'னு பெண் பணியாளர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்கவே மாட்டேங்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மேல சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.''தகவல் அறியும் உரிமை சட்டத்துல, எந்த துறையில கேள்விகள் கேட்டாலும், முறையா பதில் தர மாட்டேங்கிறாங்க... ''முறைகேடு ஊழியர்கள், அர்ச்சகர் விபரம் உட்பட ஏழு கேள்விகளை, ஹிந்து சமய அறநிலையத் துறையிடம், மதுரை சமூக ஆர்வலர் ஒருத்தர் சமீபத்துல கேட்டிருந்தாரு பா...''அதுக்கு, 'தாங்கள் கோரும் விளக்கங்கள் மனித வளத்தை பாதிக்கும் என்பதால், வழங்க இயலாது'ன்னு பதில் தந்திருக்காங்க... அதே போல, வணிக வரித் துறையிடம், 'வரி செலுத்தாத எத்தனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'ன்னு கேட்ட துக்கும், 'நீங்கள் கோரும் தகவல், இந்த அலுவலகத்தில் எந்த வடிவிலும் பராமரிக்கப்படவில்லை'ன்னு பதில் தந்திருக்காங்க பா...''இதனால, 'அரசின் எந்த திட்டத்துலயும் ஊழல், முறைகேடு நடக்கக் கூடாது... வரி கட்டுற சாதாரண மக்களும் அரசை கேள்வி கேட்கலாம் என்ற நோக்கத்துல, கொண்டு வரப்பட்ட தகவல் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பணிகளை, திராவிட மாடல் அரசு பண்ணிட்டு இருக்கு'ன்னு தகவல் ஆர்வலர்கள் புலம்புறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.