உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / காய்கறி லாரிகளில் கடத்தப்படும் குட்கா பொருட்கள்!

காய்கறி லாரிகளில் கடத்தப்படும் குட்கா பொருட்கள்!

“கிட்டத்தட்ட நாலு மாசம் லேட் பண்ணது ஏன்னு கேக்கறா ஓய்...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.“யாரு, எதை லேட் பண்ணிட்டாங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுால்களை, உரிமைத்தொகை எதுவும் இல்லாம நாட்டுடைமை ஆக்குறதா, முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சிருந்தாரோல்லியோ... இது சம்பந்தமா, ஆகஸ்ட் 22ல் அரசாணை வெளியிட்டா ஓய்...“ஆனா, அந்த அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் டிசம்பர் 22ம் தேதி தான் நேர்ல வழங்கினா... 'அரசாணை போட்ட பிறகும் நாலு மாசங்களா அமைச்சரும், அதிகாரிகளும் என்ன பண்ணிண்டு இருந்தா'ன்னு ஆளுங்கட்சியினர் பலரும் கேக்கறா ஓய்...“அதுவும் இல்லாம, 'முதல்வர் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்துலயே இப்படி லேட் பண்றவா, சாதாரண பொதுமக்கள் பிரச்னைகள்ல எந்த அளவுக்கு அக்கறை காட்டுவா... இவாளால, ஆட்சிக்கு தானே கெட்ட பெயர்'னும் ஆளுங்கட்சியினர் அலுத்துக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“தனி பூத் கமிட்டி அமைக்க போறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“தி.மு.க., - அ.தி.மு.க.,வுல பூத் கமிட்டிகள் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கும்... பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான், வாக்காளர்களுடன் நேரடி தொடர்புல இருப்பாங்க பா...“பொதுவா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுகள் எப்பவும் தி.மு.க.,வுக்கு தான் விழும்... ஆனா, இம்முறை பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாம இருக்கிறதால, தி.மு.க., மேல அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க பா...“இதனால, அரசு ஊழியர்கள் மற்றும் அவங்க குடும்ப ஓட்டுகளை வளைக்க, அ.தி.மு.க.,வுல, தனியா பூத் கமிட்டிகள் அமைக்க முடிவு பண்ணியிருக்காங்க... இந்த பூத் கமிட்டியினர், மற்ற வாக்காளர்கள் தவிர்த்து, அரசு ஊழியர்களை மட்டும் வீடு தேடி போய், 'கேன்வாஸ்' பண்றதும் இல்லாம, தபால் ஓட்டுகளை அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக திருப்பவும் திட்டமிட்டிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.“லாரிகள்ல கடத்திட்டு வந்துடுதாவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.“எதை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி மற்றும் சோலுார் மட்டம் உள்ளிட்ட கிராமப்புற கடைகள்ல, 'குட்கா' உள்ளிட்ட போதை பாக்குகள் விற்பனை தாராளமா நடக்கு... இந்த போதை பாக்குகளை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகள்ல இருந்து காய்கறி மற்றும் மீன்கள் ஏத்திட்டு மலைக்கு வர்ற வாகனங்கள்ல திருட்டுத்தனமா கடத்திட்டு வர்றாவ வே...“சில நேரங்கள்ல, வாகனங்களை போலீசார் சோதனை போட்டு, இந்த பொருட்களை பறிமுதல் செய்தாலும், 'கட்டிங்' குடுத்து எடுத்துட்டு போயிடுதாவ... இதனால, சமவெளி பகுதியில, 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த குட்கா பொருட்கள், மலையில 60 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படுது...“அதே நேரம், இந்த பொருட்களை மொத்தமா வாங்கி, கடைகளுக்கு சப்ளை செய்றவங்களை மட்டும் போலீசாரோ, மற்ற துறைகளின் அதிகாரிகளோ கண்டுக்கிறது இல்ல வே...” என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 28, 2024 19:45

எந்த திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மூன்றாம்நிலை கட்சிகாரனுக்கு income தருவது குட்கா பான்பராக் வியாபாரமே. பெரிய தலைகள் மது உற்பத்தி ஆலைகள். இரண்டாம் நிலை தலைகள் டாஸ்மார்க் லைசென்ஸ் illegal bar. ஆக மொத்தம் நாடு குட்டிச்சுவர் ..


D.Ambujavalli
டிச 28, 2024 06:50

Producers Whole salers மூலம் கிடைப்பது கணிசமாக , தொடர்ச்சியான வருமானமாக இருக்கையில் அந்தப்பக்கம் திரும்ப போலீசுக்கு மனம் வருமா? அதிகாரிகளுக்கும் தெரியுமே, கலைஞரின் எந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று 4 மாத்தமில்லை, 4 வருஷம் ஆனாலும் தங்களை யாரும் கேட்க மாட்டார்கள் என்று தெரியாதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை