கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்து கடும் போக்குவரத்து நெரிசல்
சேந்தமங்கலம்,கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், கொண்டை ஊசி வளைவில் இருந்த பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அடிவார பகுதியில் உள்ள புளியஞ்சோலை மற்றும் கருவட்டாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கொல்லி மலையில் உள்ள, 65வது கொண்டை ஊசி வளைவில் மண் அரிப்பால் பழமைவாய்ந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்தது. இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு மேல் மலைப்பாதையில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சாய்ந்த மரத்தை அகற்றினர். அதன்பின், மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால், கொல்லிமலை மலைப்பாதையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்கு வரத்து முடங்கியது.