உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  அதிகாரிகள் பதவி உயர்வில் கடைசி நேர வசூல்!

 அதிகாரிகள் பதவி உயர்வில் கடைசி நேர வசூல்!

''த கவலே தெரிவிக்காம வந்தா எப்படின்னு புலம்பறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. ''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் மோடி, வர்ற மார்ச் 1ம் தேதி மதுரை வராரோல்லியோ... அவரது பொதுக்கூட்டத்துக்கு இடம் தேர்வு பண்றதுக்காக, மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் மதுரை வந்தார் ஓய்... ''அவர் கூட, கூட்டணி கட்சியான மதுரை அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பலரும் போனா... ஆனா, மாவட்ட பா.ஜ.,வின் முக்கிய நிர்வாகிகள் யாரும் போகல ஓய்... ''ஏன்னா, நயினார் வர்றது பத்தி, அவாளுக்கு எந்த தகவலும் இல்லையாம்... 'அ.தி.மு.க.,வினர் கூட உறவாடற மாநில நிர்வாகிகள், சொந்த கட்சியினரை கண்டுக்காம இருந்தா, எப்படி தேர்தல் வேலை பார்க்கறது'ன்னு உள்ளூர் பா.ஜ.,வினர் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அமைச்சர் பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மறைச்சுட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு சொந்தமான கலை, அறிவியல் கல்லுாரி, துாத்துக்குடி மாவட்டம், குறுக்குசாலை பகுதியில் இருக்கு... அமைச்சரின் கணவர் ஜீவன் தான், கல்லுாரி தாளாளரா இருக்காருங்க... ''நாலு நாளைக்கு முன்னாடி, இந்த கல்லுாரி பஸ், மாணவ - மாணவியர் மற்றும் பேராசிரியர்களுடன் துாத்துக்குடிக்கு கிளம்புச்சு... புதுார் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பக்கத்துல போகும்போது, ஒரு லாரி மேல பஸ் மோதிடுச்சுங்க... ''இந்த விபத்துல, பஸ் டிரைவர், ஒரு மாணவி, ஒரு பேராசிரியர்னு மூணு பேர் காயம் அடைஞ்சு, மருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க... விபத்துல சிக்கிய பஸ்சை வேற ஒரு வாகனம் மூலமா, இழுத்துட்டு போனாங்க... ''அப்ப, கல்லுாரி பஸ்சின் முன்பக்கமும், பக்கவாட்டுலயும் எழுதியிருந்த அமைச்சரின் பெயரை வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி மறைச்சு எடுத்துட்டு போனாங்க... விபத்து சம்பந்தமா, ரெண்டு தரப்பும் புகார் தராததால, போலீசாரும் கண்டுக்கலைங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''கடைசி நேர வசூல்ல குறியா இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழகத்தில், 13 தேர்வு நிலை பேரூராட்சிகளை சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும், எட்டு முதல் நிலை பேரூராட்சிகளை, தேர்வு நிலை பேரூராட்சிகளாகவும், 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகளை, முதல் நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தி, சமீபத்தில் அரசாணை போட்டிருக்காவ வே... ''இந்த பேரூராட்சிகள்ல தலைமை எழுத்தர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழியா நிரப்ப போறாவ... அதிகாரிகள் பதவி உயர்வுக்கு, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியிருக்காவ... ''தேர்தல் தேதியை அறிவிச்சிட்டா எதுவும் பண்ண முடியாதுங்கிறதால, நகராட்சி நிர்வாகத்துறை முக்கிய புள்ளியின் நேரடி உதவியாளரே இந்த வசூல் வேட்டையில தீவிரமா இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. ''பிச்சையப்பன் வர்றார்... இஞ்சி டீ குடுங்க நாயரே...'' என்றபடி அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 23, 2026 06:32

அந்த ட்ரைவர், மாணவர்களின் யாராவது இறந்தால், போலீஸ் அமைச்சருக்கு உறுதுணையாக, 'அவருக்கு ஏற்கெனவே நோய் இருந்தது ' போல கூறி அமுக்கிவிடுவார்கள் அதற்கும் நல்ல 'கவனிப்பு' இருக்குமே நலத்திட்டம் வழங்கும்போது விளம்பர ஸ்டிக்கர், குற்றம் நிகழ்ந்தால், மூடி மறைக்க ஸ்டிக்கர் Multi purpose sticker ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை