உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  உறவினர்களுக்கு கட்சி பதவிகளை வாரி வழங்கும் அமைச்சர்!

 உறவினர்களுக்கு கட்சி பதவிகளை வாரி வழங்கும் அமைச்சர்!

ஏலக்காய் டீயை பருகியபடியே, “நிர்வாகிகள் கட்சி தாவியதை மறைச்சிட்டாரு பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். “எந்த கட்சி விவகாரம் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரா இருக்கிறவர் சிற்றரசு... இவரது செயல்பாடுகள் மீது அதிருப்தியாகி, ஆயிரம்விளக்கு பகுதி துணை செயலர் ரவி, மாவட்ட பிரதிநிதி சாமிவேலு உட்பட 25 பேருக்கும் மேற்பட்டவங்க, சமீபத்துல த.வெ.க.,வில் சேர்ந்துட்டாங்க பா... “இதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் பலரும், த.வெ.க.,வுக்கு தாவ தயாராகிட்டு இருக்காங்க... அதே நேரம், இப்படி நிர்வாகிகள் ஓட்டம் பிடிச்சதை, தலைமையின் கவனத்துக்கு சிற்றரசு கொண்டு போகல பா... “அப்படி கொண்டு போயிருந்தா, அவங்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கி, கட்சி பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டிருப்பாங்க... ஆனா, தனக்கு எதிரா நிர்வாகிகள் ஓட்டம் பிடிச்சதை தலைமையிடம் சொல்ல பயந்து, மாவட்டச் செயலர் மூடி மறைச்சிட்டாரு பா...” என்றார் அன்வர்பாய். “தி.மு.க., ஆட்சியில் இருந்த செல்வாக்கு இப்பவும் குறையல வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்ல இருக்கிற ஒரு அதிகாரி, தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சரா இருந்த சேகர்பாபுவுக்கு வலது கை மாதிரியே இருந்தாரு... இதனால, அஞ்சு வருஷத்துல அதிகாரியின் வருமானம் பல மடங்கு அதிகரிச்சிட்டு வே... “அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை கமிஷனரை விட, அதிகாரம் பொருந்தியவரா வலம் வந்தாரு... ஆட்சி மாறியும் இவரது ஆதிக்கம் குறையல வே... “மாவட்ட அறநிலையத்துறை செயல்பாடுகள்ல இவரது தலையீடு இன்னும் தொடருது... இப்பவும், 'மாஜி அமைச்சருக்கு விசுவாசமா இருந்து, துறைக்குள்ள நடக்கிற பல விவகாரங்களை அவருக்கு சொல்லிட்டு இருக்கார்'னு, அதிகாரி மேல ஊழியர்கள் பலரும் புகார் சொல்லுதாவ வே...” என்றார் அண்ணாச்சி. “செந்தில்குமார், இப்படி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “உறவினர்களுக்கு கட்சி பதவிகளை வாரி வழங்குறாருங்க...” என கடைசி தகவலுக்கு வந்தார். “யாரு ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா. “கடலோர தென் மாவட்டத்துல, த.வெ.க., சார்பில் ஜெயிச்சு அமைச்சரானவரை தான் சொல்றேன்... தேர்தல்லயே இவர் சரியா செயல்படலைன்னு புகார் எழுந்துச்சுங்க... “ஆனாலும், தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தியால ஜெயிச்சவர், அமைச்சர் பதவிக்கும் வந்துட்டாரு... கட்சியிலும், மாவட்டச் செயலரா இருக்காருங்க... “தனக்கு தேர்தல் வேலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பலரை நீக்கிட்டு, அந்த பதவிகள்ல தன் உறவினர்களை நியமிச்சிருக்காரு... நீக்கப்பட்ட நிர்வாகிகள், இதை கட்சி பொதுச் செயலர் ஆனந்த் கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்க... “இது சம்பந்தமா விசாரிக்க, ஆனந்தும், அவரது உதவியாளரும் அமைச்சரை பல முறை தொடர்பு கொண்டும், அமைச்சர் கண்டுக்கவே இல்ல... 'தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவருக்கு சீட் வழங்கி, அமைச்சர் பதவியும் கொடுத்தா, அவரது செயல்பாடுகள் ரொம்ப மோசமா இருக்கே'ன்னு, அவர் மீது கட்சி தலைமை கடுப்புல இருக்குதுங்க...” என முடித்தார் அந்தோணிசாமி. “மதன்ராஜ், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூன் 19, 2026 19:34

முதல்வரை. சும்மா. உட்காரவைத்துவிட்டு. சுற்றுப்பட்டு. தேவதைகளே. ஆட்சி. செய்யும்போது, ஆளாளுக்கு. தண்டல். நாயகமாவதும், தன் கும்பலை பதவிகளில். கொண்டுவருவதும். மிகுதியாவது. இயல்புதானே


Anantharaman Srinivasan
ஜூன் 19, 2026 15:02

தவெக வில் ஒவ்வொரு மந்திரியும் இப்படியே உறவினர்களுக்கு கட்சி பதவிகளை இஷ்டப்படி கொடுத்தால் நாளடைவில் கட்சி நிர்வாகம் தலைவர் கையை மீறி செயல் படும்.


S.V.Srinivasan
ஜூன் 19, 2026 08:06

த வெ க வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால் வந்த வேகத்தில் கவுந்துடும் போல இருக்கு.