உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  மண் லாரிகளிடம், கட்டிங் கேட்டு மிரட்டும் எம்.எல்.ஏ.,!

 மண் லாரிகளிடம், கட்டிங் கேட்டு மிரட்டும் எம்.எல்.ஏ.,!

நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, “பராமரிப்புன்னு 4 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுட்டா ஓய்...” என விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள் இருக்கோல்லியோ... தி.மு.க., 'மாஜி'க்கள் எல்லாம் காலி பண்ணிட்டதால, பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கற எலக்ட்ரிக்கல் பிரிவு சார்பில், இந்த பங்களாக்கள்ல பராமரிப்பு பணிகள் செய்திருக்கா ஓய்... “இதேபோல, இதே பிரிவு சார்பில் கிண்டி கவர்னர் மாளிகையிலும் சில பராமரிப்பு பணிகள் நடந்துது... மொத்தம் 6 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்ததா கணக்கு காட்டியிருக்கா... ஆனா, 2 கோடி ரூபாய்க்குதான் வேலைகள் நடந்திருக்கு ஓய்... “அதேபோல, அ.தி.மு.க., ஆட்சி நடந்த 2019ல, சென்னை நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம் முகத்துவாரம் பகுதியை அகலப்படுத்தும் பணிகளை ஒரு நிறுவனம் செய்திருக்கு... இதுக்கான பாக்கி பணம் 3.85 லட்சம் ரூபாயை, ஏழு வருஷமாகியும் தரல... இது சம்பந்தமா, முதல்வர் அலுவலகத்துல அந்த நிறுவனம் புகார் குடுத்திருக்கு ஓய்...” என்றார் குப்பண்ணா. உடனே, “பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “டாஸ்மாக் தகவலா பா...” என கேட்டார் அன்வர்பாய். “ஆமாம்... 'டாஸ்மாக் கடைகள்ல வழக்கம்போல பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குங்க... நாங்க சோதனைக்கு வந்தாலும் பயப்பட வேண்டாம்'னு ஊழியர்களுக்கு அதிகாரிகள், 'சிக்னல்' குடுத்திருக்காங்க... “இதனால, குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலா 10 ரூபாயும், பாட்டிலை திருப்பி தந்தா தர வேண்டிய 10 ரூபாய்னு, 20 ரூபாயா சேர்த்து வசூலிக்கிறாங்க... ஆனா, மது வாங்கி குடிக்கிற பலரும் போதையில பாட்டில்களை திருப்பி தர மறந்து அப்படியே போயிடுறாங்க... “இதனால, ஊழியர்களுக்கு கூடுதல் லாபமா போயிடுது... வெளிநாட்டு மதுபானங்கள் விற்கிற, 'எலைட்' கடைகள்லயும் ஒரு முழு பாட்டிலுக்கு 60 ரூபாயை கூடுதலா வசூலிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “கட்டிங் கேட்டு மிரட்டுதாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “துாத்துக்குடி மாவட்டத்தில் ஜெயிச்சிருக்கிற த.வெ.க., - எம்.எல்.ஏ., ஒருத்தர் மீது நிறைய புகார்கள் வந்துட்டே இருக்கு... 'ஆன்லைன்' லாட்டரி தொழில் பண்ணிட்டு இருந்தவர், எம்.எல்.ஏ., ஆனதும், தன் நண்பரிடம் அதை கைமாத்தி விட்டதா ஏற்கனவே பேசியிருந்தோமுல்லா... “இப்ப, 'குளங்கள்ல மண் எடுக்க ஒரு லாரிக்கு 300 ரூபாய் கட்டிங் த ரணும்'னு அதிகாரிகள் மூலமா மிரட்டுதாரு... 'குளங்கள்ல இலவசமா மண் அள்ளிக்கிடலாம்'னு அரசாணையே இருக்கு வே... “ஆனாலும், எம்.எல்.ஏ.,க்கு கட்டிங் தராதவங்க மண் எடுக்க, சம்பந்தப்பட்ட தாலுகா அதிகாரிகள் அனுமதி தர மாட்டேங்காவ... அதையும் மீறி மண் எடுத்தா, ஆய்வு என்ற பெயர்ல எம்.எல்.ஏ.,வே நேர்ல போய் மிரட்டுதாரு வே... “அதோட, பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில், தன்னை சுத்தி 10 பேரை வச்சிருக்காரு... இவங்க, எம்.எல்.ஏ., போற இடங்கள்ல எல்லாம் மொபைல் போன்ல படங்கள், வீடியோ எடுத்து அலப்பறை பண்ணிட்டு இருக்காவ வே... “இது பத்தி அவரிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதுக்கு, 'எனக்கு எத பத்தியும் கவலையில்ல... என் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காது'ன்னு தெனாவெட்டா பேசுதாரு வே...” என முடித்தார் பெரியசாமி அண் ணாச்சி. “சரவணன், ஸ்ரீவைகுண்டத்துல இருந்து எப்ப வந்தீங்க...” என நண்பரிடம் அந்தோணிசாமி பேச, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜூன் 29, 2026 19:18

மணல் லாரிகளிடம் கட்டிங் கேட்டு மிரட்டும் MLA சரவணன் தன் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று எந்த தைரியத்தில் கூறுகிறார்...? MGR ஜெயலலிதா ஆட்சியில் கூட எந்த MLAவும் அப்படி சொன்னதில்லை.


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2026 19:05

தனி மெஜாரிட்டியே இன்னும் கிடைக்கல. அதற்குள் அங்காங்கே MLA களின் உருட்டல் மிரட்டல் கறார் வசூல். தூய ஆட்சி தருவேன் என்று சொன்னதைக்கேட்டு ஓட்டு போட்டது தப்பாபோச்சேயென்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.


JeevaKiran
ஜூன் 29, 2026 17:50

இதெல்லாம் விஜய்யின் கண்களுக்கு தெரியவில்லையா?


duruvasar
ஜூன் 29, 2026 14:57

ஸ்டாலின் மகிழ்ச்சி அடையவேண்டும் அவர் விரும்பிய மாதிரியே திராவிட மாடல் 2.0 வந்தே வந்துவிட்டது.


VSMani
ஜூன் 29, 2026 14:07

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தபின் மக்களுக்கு ஏமாற்தான் மிச்சம். 2 கோடி ரூபாய்க்கு வேலை செய்துவிட்டு 6 கோடிக்கு பில் போடுவது. பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று கரூரில் விஜய் சொன்னார் அதன்பின் தான் கூட்டத்தில் அசம்பாவிதம் ஆரம்பித்திருக்கிறது. இப்போது விஜய் ஆட்சியிலும் பாட்டீலுக்கு 10 ரூபாய், ஆன்லைன் லாட்டரி ஸ்ரீவைகுண்டம் MLA சரவணனின் அட்டகாசங்கள், மண் லாரிகளிடம், கட்டிங் கேட்டு மிரட்டுவது. பின்னர் இது எப்படி தூய ஆட்சியாகும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை