உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கூட்டுறவு துறை பணியிடங்களுக்கு நடந்த நுாதன வசூல்!

 கூட்டுறவு துறை பணியிடங்களுக்கு நடந்த நுாதன வசூல்!

டபராவில் நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''ஆதாரங்களை எல்லாம் அழிச்சுடறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''பத்திரப்பதிவு ஆபீஸ்கள்ல பதிவாகற பத்திரங்களின் உண்மை தன்மையை, அந்தந்த சார் - பதிவாளர்கள் தான் சரிபார்க்கணும்... தாய் பத்திரங்களை, தங்களது துறையில் இருக்கற அட்டவணை ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கணும் ஓய்... ''ஆனா, சேலம் சார் - பதிவாளர் ஆபீஸ்ல, இப்படி எதையும் செய்யாம, மோசடி புகார்ல சிக்கிய நிலங்களுக்கான பத்திரங்களை நிறைய பதிவு பண்றா... இதுக்காக, பதிவுத்துறையின் அட்டவணை ஆவணங்களையே திருத்தி, மோசடி பத்திரங்களை பதிவு பண்ணி குடுக்கறா ஓய்... ''இதுக்கு காரணமான பொறுப்பு அதிகாரி மீது, தலைமை அலுவலகத்துல நிறைய புகார்கள் குவியறது... ஆனாலும், அங்க இருக்கற உயர் அதிகாரிகள், அவரை காப்பாத்த தான் முயற்சி பண்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''கோகுல்ராஜ், இங்கன உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''இப்படிப்பட்ட அப்பாவி தொண்டர்களால தான், அரசியல் தலைவர்கள் வண்டி ஓடுது வே...'' என்றார். ''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் தம்பி சுதீஷ், சமீபத்துல ராஜ்யசபா எம்.பி.,யா தேர்வாகியிருக்காருல்லா... இவர், 2009, 2014, 2019 ஆகிய மூணு லோக்சபா தேர்தல்கள்ல போட்டியிட்டு, தோத்துட்டாரு வே... ''இதுல 2014ல், சேலம் லோக்சபா தொகுதியில் சுதீஷ் போட்டியிட்டப்ப, இவர் ஜெயிச்சா சமயபுரம் மாரியம்மன் கோவில்ல மொட்டை போட்டுக்கிறதா, திருச்சியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்ற தொண்டர் வேண்டியிருந்தாராம்... ''இந்த சூழல்ல, 12 வருஷத்துக்கு பிறகு சுதீஷ் ராஜ்யசபா எம்.பி.,யாகிட்டதால, அந்த தொண்டர் சமீபத்துல சமயபுரம் போய் மொட்டை போட்டு, வேண்டுதலை நிறைவேத்தியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி ''பணம் குடுத்தவங்க பரிதவிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள்ல, 2,848 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியா இருந்துச்சு... இவற்றை நிரப்ப, போன வருஷம் அக்டோபர், நவம்பர் மாசங்கள்ல எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் நடத்தினாங்க... ''தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் சமீபத்துல, 'போஸ்டிங்' போட்டிருக்காங்க... ஆனா, இந்த பணியிடங்களுக்காக, மாவட்ட அளவிலான ஆளுங்கட்சியினர் நிறைய பேரிடம், தலா 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி, முக்கால்வாசி பணத்தை முன்னாடியே வசூல் பண்ணிட்டாங்க... ''இப்ப, வேலை கிடைச்சவங்களிடம், 'நாங்க சொல்லிதான் உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு'ன்னு பெருமை அடிச்சுக்கிறாங்க... கிடைக்காதவங்களிடம், 'நீங்க தந்த பணத்தை, துறை மேலிடம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் குடுத்துட்டோம்... நீங்க ரொம்ப கம்மியா மார்க் எடுத்துட்டதால வேலை கிடைக்கல... நாங்க என்ன பண்றது'ன்னு கையை விரிச்சுட்டாங்க... இதனால, பணத்தை குடுத்தவங்க பரிதவிச்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மார் 12, 2026 18:42

செந்தில் பாலாஜி கேஸே இதைப்போன்றது தானே..


D.Ambujavalli
மார் 12, 2026 06:29

இந்த ‘காசு கொடுத்தால் வேலை’ கூத்து அமைச்சர் வரை அரங்கேறி உள்ள நிலையில், கொடுத்தவருக்கு என்ன நீதி கிடைத்துவிடும்? திறமைக்கு மதிப்பு என்பதே கனவாகி விட்ட நிலையில், இத்தகைய ப்ரோக்கர்கள் காட்டில் மழை என்பதுதான் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை