வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேரடி டிக்கெட் கவுன்டர் திறப்பு
தாம்பரம்,நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுார் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் டிக்கெட் எடுக்க வசதியாக, ஒரு நுழைவு டிக்கெட் கவுன்டர், ஒரு பேட்டரி வாகன கவுன்டர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழும் வண்டலுார் பூங்காவில், 20 டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. தொடர் விடுமுறை மற்றும் காணும் பொங்கல் அன்று, 20 கவுன்டர்களும் திறக்கப்பட்டு, டிக்கெட் வினியோகிக்கப்படும்.மற்ற நாட்களில், நான்கு கவுன்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், அந்த கவுன்டர்களில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று, பூங்காவிற்குள் சென்று விலங்குகளை கண்டு ரசித்து வந்தனர்.இந்நிலையில், முறையான அறிவிப்பு இன்றி திடீரென, நேரடி டிக்கெட் பெறும் முறை ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் நுழைவு கட்டண முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திடீர் முடிவுக்கு, ஏழை மற்றும் நடுத்தர பார்வையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.மேலும், சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், வாட்ஸாப், ஜிபே போன்றவற்றை உபயோகிக்க தெரியாதவர்கள், டிக்கெட் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வந்த ஏகப்பட்ட பார்வையாளர்கள், ஏமாற்றத்தோடு திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.முன்னறிவிப்பு இன்றி, அவசர அவசரமாக ஆன்லைன் டிக்கெட் முறை அமலானது, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, ஒரு நேரடி டிக்கெட் கவுன்டராவது எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, போனில் ஆன்லைன் வசதி இல்லாத பார்வையாளர்களின் வசதிக்காக, ஒரு நுழைவு டிக்கெட் கவுன்டர், ஒரு பேட்டரி வாகன கவுன்டர் மீண்டும் திறக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.