ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''கடும்மன உளைச்சல்ல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''யாரு வே அது...'' எனகேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில், 100க்கும் மேற்பட்டவேட்டை தடுப்பு காவலர்கள் இருக்காங்க...இதுல சிலர், 10 வருஷத்துக்கும் மேலா பணியிலஇருக்காங்க பா...''இவங்களை வனக் காவலர்களா பணி நியமனம் செய்யணும்னு கோரிக்கை வச்சும், உயர்அதிகாரிகள் காது கொடுத்துகேட்க மாட்டேங்கிறாங்க...அதுவும் இல்லாம, இவங்களுக்கு மாசம், 19,500 ரூபாய் சம்பளம்வழங்க அரசு உத்தரவு போட்டு, பல மாதங்கள் ஆகிடுச்சு பா...''ஆனா, இப்பவும் பழைய சம்பளமான, 12,500 ரூபாய் தான் தர்றாங்க... இதனால, விரக்தியில இருக்கிற வேட்டை தடுப்பு காவலர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சருக்குகடிதம் அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அன்புமணியை கிண்டல் அடிச்சவருக்கு அர்ச்சனை விழுது வே...''என்றார், அண்ணாச்சி.''மேல சொல்லுங்க...''என்றார், அந்தோணிசாமி.''பெஞ்சல் புயலால்பாதிக்கப்பட்ட கடலுார்மாவட்டம், கண்டக்காடுகிராமத்தில், பா.ம.க., சார்புல மருத்துவ முகாம்நடத்தினாவ... இதுல கலந்துக்கிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, தானும் ஒரு டாக்டருங்கிறதால, வெள்ளை கோட்டும், ஸ்டெதஸ்கோப்பும் போட்டுக்கிட்டு பொதுமக்களை, 'செக்கப்'செஞ்சாரு வே...''அப்ப, காதுல மாட்டவேண்டிய ஸ்டெதஸ்கோப்பை, கழுத்துல மாட்டியபடியே ஒரு சிறுவனை அவர் பரிசோதிக்கிற போட்டோவை யாரோ எடுத்து, சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டாவ... அந்த படத்தை, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன், தன் சமூக வலைதளத்தில்வெளியிட்டு, 'லவ் பெல்என்ற அதிசய பிறவியானஇவருக்கு காது பிடரியில்இருக்கிறது'ன்னு கிண்டலாபதிவு போட்டுட்டாரு வே...''இதுக்கு, காங்., தரப்பினர், 'லைக்' பண்ணி பதிவுகள் போடுதாவ... பா.ம.க.,வினரோ, 'ராமதாஸ் குடும்பத்தை விமர்சனம் பண்றதே உனக்கு வேலையா போச்சு'ன்னு சொல்லி, காது கூசும் வார்த்தைகளால ராம சுகந்தனை அர்ச்சனை பண்ணிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ஊராட்சி ஊழியர்கள்அதிர்ச்சியில இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''உள்ளாட்சி அமைப்புகள்ல, குப்பை அள்றதுக்குஇப்ப பேட்டரி வாகனங்களை தானே பயன்படுத்தறா... இந்த வாகனங்கள்அடிக்கடி ரிப்பேராயிடறது... அவற்றை சப்ளை செய்த நிறுவனங்கள் சரி பண்ணி தர மாட்டேங்கறான்னு ஏற்கனவே நாம பேசியிருக்கோமோல்லியோ...''திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான், பேட்டரிவாகனங்களை சப்ளை செய்யறது... திருப்பூர் மாநகராட்சிக்கு சப்ளை செய்த வாகனங்களும் ரிப்பேராயிடுத்து... 'சர்வீஸ்பண்ணி தாங்கோ'ன்னு கேட்டும், நிறுவனம் தரப்பு கண்டுக்கல ஓய்...''இதனால, 'இந்த வாகனங்களை இனிமே வாங்கப்படாது'ன்னு மாநகராட்சி நிர்வாகம் முடிவு பண்ணிடுத்து... ஆனா, மாவட்டத்துலஇருக்கற மற்ற ஊராட்சிகளுக்கு, இந்த நிறுவனத்தின் வாகனங்களை வாங்கறதுக்கு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் முடிவு பண்ணியிருக்கார்... இதனால, ஊராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியிலஇருக்கா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.