நாளிதழை மடித்தபடியே, “பழனிசாமிக்கு புகார் அனுப்பியிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.“யாரு, எதுக்கு வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“சென்னை, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்துல, அரசை கண்டிச்சு தமிழகம் முழுக்க அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே... துாத்துக்குடி தெற்கு மாவட்ட செயலரான, 'மாஜி' அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்துச்சுங்க...“எல்லாரையும் போலீசார் கைது பண்ணி, பஸ்ல ஏத்தினாங்க... சில நிர்வாகிகள் பஸ்ல ஏறாம நின்னுட்டு இருந்தாங்க... இதை பார்த்து, 'டென்ஷன்' ஆன சண்முகநாதன், 'கைதாகலைன்னா ஏன் இங்க வந்தே... பேசாம வீட்டுக்கு போயிடு'ன்னு பல நிர்வாகிகளை ஒருமையில திட்டியிருக்காருங்க...“இதனால, நிர்வாகிகள் கடுப்பாகிட்டாங்க... 'போலீசார் முன்னிலையில் அவமானப்படுத்துற மாதிரி பேசிட்டாரு... கட்சியினரை மதிக்க தெரியல'ன்னு பழனிசாமிக்கு புகார்களை தட்டி விட்டிருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.“பயிற்சி இல்லாம சொதப்புறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“ஜி.எஸ்.டி., பிரச்னையால வணிகர்களுக்கும், வணிகவரி ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு நடக்குது... பில்கள்ல சின்ன சின்ன எழுத்து பிழைகள் இருந்தாலே, பல ஆயிரங்களை அபராதமா விதிக்கிறாங்க பா...“இந்த துறையில், உதவியாளர்களா இருந்த 1,000 பேருக்கு ஒரு வருஷம் முன்னாடி தான் மாநில துணை வணிகவரி அலுவலரா, 'புரமோஷன்' போட்டாங்க... ஆபீஸ்ல பைல்கள் தயார் பண்ணிட்டு இருந்தவங்களை, அப்படியே பறக்கும் படைக்கு அனுப்பி, வாகனங்களை கண்காணிக்க சொல்லிட்டாங்க பா...“இதனால, 'இவங்களுக்கு முறையான பயற்சி இல்லாம, சின்ன பிரச்னைகளை கூட பெருசாக்கி நடவடிக்கை எடுத்துடுறாங்க... இவங்களுக்கு சில மாதங்கள் பயிற்சி குடுத்து, களத்துல இறக்கி விட்டிருக்கலாம்'னு வணிகர்கள் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.“வசூலை வாரி குவிக்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு அதிகாரி இருக்கார்... பக்கத்துல இருக்கற மறைமலை நகர், கிளாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் கூடுதல் பொறுப்பா கவனிக்கறார் ஓய்...“இந்த மூணு ஸ்டேஷன் எல்லையில இருக்கற 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், வணிக நிறுவனங்கள், கனரக வாகன உரிமையாளர்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பார்களுக்கு போலீசாரை அனுப்பி தினசரி மாமூல் வசூலிக்கறார்... இந்த வகையில், தினமும் 3 லட்சம் ரூபாய் வசூலாகறது ஓய்...“இதுல, குறிப்பிட்ட பங்கை உயர் அதிகாரிக்கு, 'ராஜ'மரியாதையோட காணிக்கையா செலுத்திடறார்... இதனாலயே, இவரை வேற எங்கயும் மாத்தாம உயர் அதிகாரியும் காபந்து பண்ணிண்டு இருக்கார் ஓய்...“போக்குவரத்து போலீசார், 'மாமூல் வாழ்க்கை'யில பிசியா இருக்கறதால, போக்கு வரத்தை சீரமைக்க ஆட்கள் இல்லாம, ஆயுதப்படை போலீசாரை கூப்பிட வேண்டி இருக்கு... 'இந்த மூணு ஸ்டேஷன்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமிச்சு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தணும்'னு மக்கள் புலம்பறா ஓய்...” எனமுடித்தார், குப்பண்ணா.“ஹேமந்த் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.