பொறுப்பு அதிகாரி அடாவடியால் போலீசார் வெறுப்பு!
“மு றைகேடு செஞ்சவங்களுக்கே மறுபடியும் பதவி குடுக்க போறாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய். “துாத்துக்குடி நகரின் மையப் பகுதியில் சிவன் கோவில் இருக்கு... இங்க மின்சார பிரச்னைகள் இருந்ததால, சில மாசங்களுக்கு முன்னாடி, 18 லட்சம் ரூபாய் மதிப்புல பராமரிப்பு பணிகள் செஞ்சாவ வே... “ஆனாலும், சமீபத்துல பெய்ஞ்ச கனமழையில மீண்டும் மின் பிரச்னை ஏற்பட்டு, கோவில்ல பல மணி நேரம், 'கரன்ட் கட்'டாயிட்டு... “பக்தர்கள் தரப்பு, 'அறங்காவலர் குழுவுல ஆளுங்கட்சியினர் உட்பட பலர் இருந்தப்ப, மின் பராமரிப்பு பணிகள் செஞ்சதுல பல முறைகேடுகள் நடந்துட்டு... இப்ப, அறங்காவலர் குழு பதவிக்காலம் முடிஞ்சிட்டாலும், பழைய ஆட்களையே திரும்பவும் நியமிக்க ஏற்பாடுகள் நடக்கு... பழைய ஆட்களை போட்டா, இந்த மாதிரி ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்கும்'னு புலம்புது வே...” என்றார், அண்ணாச்சி. “பத்திரத்தை விடுவிக்காம அடம் பிடிக்கறார் ஓய்...” என்றார், குப்பண்ணா. “யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி. “பட்டுக்கு பேர் போன மாவட்ட பத்திரப்பதிவு துறை அதிகாரியை தான் சொல்றேன்... இவர், ஏற்கனவே திருச்சியில் இருந்தப்ப, இவர் மீது போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கு பதிவாகியிருக்கு ஓய்... “இருந்தாலும், யார், யாரையோ பிடிச்சு, பட்டு மாவட்டத்துக்கு அதிகாரியா வந்துண்டார்... வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில், வள்ளுவப்பாக்கம் கிராமத்துல சிலர் வீட்டு மனைகள் போட்டிருக்கா ஓய்... “இதுக்கு, 'காஞ்சிபுரம் மாநகராட்சி வழிகாட்டி மதிப்புல பத்திரம் பதிவு செய்யணும்'னு சொல்லி, பல லட்சங்களை கமிஷனா கேட்டிருக்கார்... கமிஷன் கிடைக்காததால, பத்திரத்தை நிலுவையில் போட்டுண்டார் ஓய்... “இது சம்பந்தமா, பாதிக்கப்பட்ட தரப்பு சென்னை ஐகோர்ட்ல வழக்கு போட்டு, பத்திரத்தை விடுவிக்க உத்தரவு வாங்கியும், அதிகாரி கண்டுக்கவே இல்ல ஓய்...” என்றார், குப்பண்ணா. “இப்படி உட்காருங்க முரளி...” என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, “போலீஸ் அதிகாரியின் அடாவடியை கேளுங்க பா...” என்றபடியே தொடர்ந்தார்... “அல்வாவுக்கு பேர் போன ஊர்ல, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருத்தர் இருக்கார்... முதல்ல டெல்டா மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட இவர், உயர் அதிகாரிகளிடம் பேசி, பொறுப்பு பதவியா வாங்கிட்டு, 'அல்வா' ஊருக்கு வந்தாரு பா... “ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கே ஒன்றிரண்டு, 'ஆர்டர்லி'கள் தான் இருப்பாங்க... ஆனா, இவருக்கு நாலஞ்சு பேர் இருக்காங்க பா... “தனக்கு காபி போட, 'இத்தனை டிகிரி செல் ஷியஸ் வெப்பத்தில் தான் பால் சுட வைக்கணும்'னு போலீசாருக்கு குடைச்சல் குடுக்கிறாரு... “ஒரு பெண்ணை தனக்கு உதவியாளரா நியமிச்சிருக்கிறவர், அவங்களுக்கான சம்பளத்தை, சக போலீசார் எல்லாம் சேர்ந்து குடுக்கணும்னு மிரட்டுறாரு பா... “தனக்கு ஒத்துவராத போலீசார் பத்தி, இவரே அதிகாரிகளுக்கு மொட்டை கடிதம் போடுறாரு... பொறுப்பு அதிகாரியால, போலீசார் வெறுத்து போயிருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய். “மயில்சாமி, இந்தாரும்...” என, நண்பரிடம் நாளிதழை தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.