உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  டிரான்ஸ்பர் இன்றி ஓராண்டாக தவிக்கும் போலீசார்!

 டிரான்ஸ்பர் இன்றி ஓராண்டாக தவிக்கும் போலீசார்!

ப னிக்கு இதமாக சுக்கு காபியை பருகியபடியே, ''ஆளுங்கட்சி புள்ளிங்கிறதால விட்டுட்டாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ள, மொபைல் போன்கள் எடுத்துட்டு போக தடை இருக்கு... சமீபத்துல, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் கோவிலுக்கு வந்திருக்காரு வே... ''வி.ஐ.பி.,க்கள் பகுதியில் அமர்ந்து, அம்மனை கண்குளிர தரிசனம் செஞ்சாரு... அப்ப, திடீர்னு தன் மொபைல் போனை எடுத்து, சாமி கும்பிடுற மாதிரி கைக்குள்ள மறைச்சு வச்சு, மூலஸ்தானத்தை வீடியோ எடுத்திருக்காரு வே... ''இதை பட்டர் ஒருத்தர் பார்த்து சத்தம் போட, கோவில் ஊழியர்கள் மொபைல் போனை பிடுங்கி, வீடியோவை அழிச்சிட்டாவ... இதே சாதாரண ஆளா இருந்தா, போலீஸ்ல ஒப்படைச்சு வழக்கு போட்டிருப்பாவ... ஆனா, ஆளுங்கட்சி பிரமுகருங்கிறதால சத்தமில்லாம, அவரை அனுப்பிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''சிவகாசி தொகுதிக்கு வேட்டு வந்துடுமோன்னு பயப் படுறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்துல, 61 கோடி ரூபாய் செலவுல கட்டிய மேம்பாலத்தை, சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரு... இதுக்காக, சிவகாசி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., அசோகனுக்கு அவரது ஆதரவாளர்கள் பாராட்டு விழா நடத்தினாங்க பா... ''இதுல பேசிய அசோகன், 'இந்த பாலத்தை கட்டுறதுக்கு, 2014ல் அ.தி.மு.க., ஆட்சியில, முதல் கட்டமா, 23 லட்சம் ரூபாயை அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒதுக்கி, பிள்ளையார் சுழி போட்டார்... அவருடைய பங்கையும் நாம பாராட்டி ஆகணும்'னு சொன்னாரு பா... ''தி.மு.க., கூட்டணியில இருந்துட்டு, அதுவும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்ச பாலத்துக்கான பாராட்டு விழாவுல, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் புகழ் பாடியதை கேட்டு, உள்ளூர் தி.மு.க.,வினர் கடுப்புல இருக்காவ... இதனால, 'வர்ற தேர்தல்ல, நமக்கு சிவகாசி மறுபடியும் கிடைக்குமா'ன்னு காங்கிரசார் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''டிரான்ஸ்பர் கிடைக்காம தவிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், 25 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவுன்னு, 2,500க்கும் மேற்பட்ட போலீசார் இருக்கா ஓய்... ''இவா, இந்த, 25 ஸ்டேஷன்களுக்குள்ள டிரான்ஸ்பர் வாங்கிண்டு போற வசதி இருக்கு... ஆனா, கடந்த ஒரு வருஷமா யாருக்கும் டிரான்ஸ்பர் தர மாட்டேங்கறா ஓய்... ''போலீஸ் குறைதீர் கூட்டங்கள்ல, மனுக்கள் குடுத்தும் பலன் இல்ல... சிலர், மருத்துவ காரணங்களுக்காக டிரான்ஸ்பர் கேட்டாலும் தர மாட்டேங்கறா ஓய்... ''இதுக்கு இடையில, சில போலீசார் மாவட்டம் விட்டு மாறுதல் வாங்கிண்டு போயிட்டதால, இப்போதைக்கு தாம்பரம் கமிஷனரகத்துல, 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் காலியா கிடக்கு... இதனால, மற்ற போலீசார் கூடுதல் பணிப்பளுவால திணறிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !