பி ல்டர் காபியை ருசித்தபடியே, “புது கார், வீடுன்னு கொழிக்கறார் ஓய்...” என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் குப்பண்ணா. “யாருங்க அது...” என விசாரித்தார், அந்தோணிசாமி. “சென்னை, தாம்பரம் கமிஷனரக கட்டுப்பாட்டில், மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் வரது... இந்த ஸ்டேஷன் போலீசார், போன மாசம், பொத்தேரி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் ரெண்டு பேரை பிடிக்க போனா ஓய்... “அந்த ரெண்டு பேரும், போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தப்பிச்சு ஓடிட்டா... இது சம்பந்தமா விசாரணை நடத்திய, சட்டம் - ஒழுங்கு போலீஸ் அதிகாரி, அந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காம இருக்க, வக்கீல் ஒருத்தர் மூலமா சில லட்சங்களை வாங்கிட்டார் ஓய்... “இந்த அதிகாரி, சில மாசங்களுக்கு முன்னாடி, திருக்கச்சூர் பகுதி மளிகை கடையில், 'குட்கா' விற்பனை பண்ணின கடை உரிமையாளரிடம், 90,000 ரூபாயும், கோகுலாபுரம் பகுதி கடைகள்ல, 2 லட்சம் ரூபாயும் வசூல் பண்ணிட்டார்... இப்படி சம்பாதிச்ச பணத்துல, மறைமலை நகர் பக்கத்துல இருக்கும் கூடலுார் பகுதியில், 60 லட்சத்தில் வீடும், தீபாவளிக்கு புது காரும் வாங்கிட்டார் ஓய்...” என்றார், குப்பண்ணா. “சுரேஷ்குமாருக்கு இடம் குடுங்க பா...” என்ற அன்வர்பாயே, “நாலு பேருக்கும், 'டோஸ்' விட்டிருக்காரு பா...” என்றார். “யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு, தி.மு.க.,வுல ஒன்றிய செயலர் வெண்ணிலா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் தருண், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார்னு நாலு பேர் முட்டி மோதுறாங்க... இந்த நாலு பேருமே சொந்தக் காரங்க தான் பா... “ஆனா, தனித்தனி கோஷ்டியா செயல்படுறாங்க... மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேலு, சமீபத்துல சேலம் வந்தாரு பா... அவர் கையில, வீரபாண்டி தொகுதி நிர்வாகிகள் செயல்பாடு சம்பந்தமா, உளவுத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் நடத்திய, 'சர்வே ரிப்போர்ட்' வச்சிருந்தாரு... நாலு பேரும் தனித்தனியா கோஷ்டி சேர்த்துட்டு செயல்படுறதை சுட்டிக்காட்டி கடுமையா, 'டோஸ்' விட்டிருக்காரு பா... “அதுவும் இல்லாம, 'சட்டசபை தேர்தல்ல கட்சி ஜெயிக்கணும்னா, நாலு பேரும் சேர்ந்து செயல்படுங்க... யாருக்கு சீட் என்பதை முதல்வர் முடிவு பண்ணுவார்'னு சொல்லிட்டு போயிருக்காரு பா...” என்றார், அன்வர்பாய். “சிசிடிவி கேமரா காட்சிகளை பறிச்சிடுறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “துாத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கும் வகையில், போலீசார் மற்றும் தனியார் அமைப்புகள் சார்புல பல இடங்கள்ல கண்காணிப்பு கேமராக்கள் வச்சிருக்காங்க... மாவட்டத்துல அங்கங்க நடக்கும் வழிப்பறிகள், கொலைகள், அடிதடி தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்கள்ல பரவுதுங்க... “இதனால, கடுப்பான போலீஸ் உயர் அதிகாரி, 'இந்த வீடியோக்கள் எக்காரணத்தை கொண்டும் மீடியாக்களுக்கு போகக்கூடாது'ன்னு, போலீசாருக்கு உத்தரவு போட்டிருக்காரு... இதனால, குற்ற சம்பவங்கள் நடந்தா, சம்பந்தப்பட்ட இடத்துல இருக்கும் கடைகள்ல போலீசார் புகுந்து, வீடியோ காட்சிகள் அடங்கிய, 'ஹார்டு டிஸ்க்'கை பறிமுதல் பண்ணிட்டு போயிடுறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி. “ஆல்பர்ட், நாளைக்கு பார்க்கலாம்...” என, நண்பரிடம் விடைபெற்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.