சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
ப.வேலுார், -சனி பிரதோஷத்தையொட்டி, ப.வேலுார், எல்லையம்மன் கோவிலில், 400 ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரருக்கு நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில், பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காசி விஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கைலாசநாதர் மற்றும் நந்திபகவானுக்கு வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது. பின், பிரதோஷ நாயகர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.