உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: தமிழகத்தில், போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன் அதிகாரத்தில், ஒரு கையெழுத்திலேயே, டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே... அதை விட்டுவிட்டு, கண் துடைப்பு நாடகமாக, விளம்பரத்தில் கண்ணீர் வடிப்பது ஒருபுறமும், மறுபுறம் பொங்கல் நாட்களில், 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனையும் நடக்கிறது. தமிழகத்தை போதை நாடாக மாற்றியது தான், தி.மு.க.,வின் சாதனையே தவிர, பாராட்ட ஒன்றும் இல்லை.முதல்வர் சொல்வதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போல... அரசின் டாஸ்மாக் சரக்கை விட்டுட்டு, தவறான போதையின் பாதையில் போகாதீங்கன்னு அவர் சொல்லுவார் போலும்? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த, 13, 14 தேதிகளில், 'டாஸ்மாக்' கடைகள் வாயிலாக மட்டும், 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாகவும், இது, கடந்த ஆண்டை விட, 47 கோடி ரூபாய் அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது, நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலா வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், அரசுக்கும், மதுபான நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியா தான் இருக்கும்!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: ஜனநாயகத்தை சீர்குலைக்க, அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் கடமையும், பொறுப்பும், நம் அனைவருக்கும் இருக்கிறது. அதற்காக, கட்சியினர் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும், மிகவும் இன்றியமையாதது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றி வாகை சூடுவோம்.இதை தானே பன்னீர்செல்வம் அணியினரும் சொல்றாங்க... அவங்களையும் கட்சியில் சேர்த்துக்கிட்டா தான் என்ன?தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலர், சாமுவேல் ராஜ் பேட்டி: தமிழகத்தில், கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. முதல்வரின் கீழ் செயல்படும் காவல் துறையினரின் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுதும் நாங்கள் ஆய்வு செய்தபோது, ஆசிரியர்கள் ஜாதி ரீதியாக செயல்படுவதாக, மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது, அதிர்ச்சியாக உள்ளது.உங்களுக்கு தான் இது அதிர்ச்சி... இதெல்லாம் தெரிந்தும், தெரியாதது மாதிரி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் கடந்து போயிட்டே இருப்பாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை