உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பி போர்ப் பிரகடனம் செய்த நேதாஜி, தான் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமென்ட், நேரு ரெஜிமென்ட், ஆசாத் ரெஜிமென்ட் என்ற பெயர்களை சூட்டினார். இந்த வரலாறு, ஆர்.எஸ்.எஸ்., தொட்டிலில் வளர்ந்த கவர்னர் ரவிக்கு தெரிய வாய்ப்பில்லை. கவர்னர் ரவி, எந்த இடத்திலும் காந்தியை நேதாஜி மதிக்கவில்லை என சொல்லவில்லையே... இவங்க தான் தப்பா அர்த்தம் எடுத்துக்கிறாங்க! தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி அறிக்கை: இன்றைக்கு ஹிந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். தி.மு.க.,வின் கடைசி தொண்டர் இருக்கிற வரைக்கும் கருப்பு, சிவப்பு கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் அண்ணாதுரை, கருணாநிதியின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும் ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பும் தமிழகத்தை நெருங்க முடியாது.தமிழகத்துல இப்ப யாரும், எந்த மொழியையும் திணிக்கிற மாதிரி தெரியலையே...!நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதனை கண்டுகொள்ளவில்லை. முதலில் நாம் மாற வேண்டும். அதற்குப்பின், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதம் என மற்ற மொழிகளை அழிப்பது நம் வேலையல்ல; நம் தாய் மொழி வாழ வேண்டும் என நினைக்க வேண்டும். எந்த மொழியும் கற்பது தவறில்லை; தாய்மொழியில் பேச வேண்டும் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும்.இவர் சொல்வது சரிதானே... முதலில் நம்ம மொழியை நாம மதிச்சா தானே, மத்தவங்களும் மதிப்பாங்க!அ.தி.மு.க., மருத்துவர் அணி இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: தி.மு.க., இளைஞரணி மாநாட்டை, தமிழக உரிமை கேட்கும் மாநாடு என, ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் தான் கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு என, தமிழக உரிமைகள் பறிபோனது. ஆனால், தமிழகத்தின் உரிமையை தட்டிப் பறித்த கர்நாடகா, கேரளாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்பதற்கு ஸ்டாலினும், உதயநிதியும் பதில்அளிக்கத் தயாரா?அதெல்லாம் இருக்கட்டும்... அவங்க பறிகொடுத்த தமிழக உரிமைகளை மீட்க, இவங்க அ.தி.மு.க., ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தாங்களாம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ