உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தொடர்பு எல்லைக்கு அப்பால் தாலுகா அதிகாரி!

தொடர்பு எல்லைக்கு அப்பால் தாலுகா அதிகாரி!

சூடான மெதுவடையை தின்றபடியே, ''டிஜிட்டல் அப்டேட் பணிகளை துவங்கிட்டா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் எல்லாம், ஆளுங்கட்சி மேல அதிருப்தியில இருக்காளோல்லியோ... சட்டசபை தேர்தலுக்குள்ள, அவா எல்லாருக்கும் உரிமைத்தொகை குடுக்கறதுக்கான பணிகளை துவங்கிட்டா ஓய்...''அதாவது, விண்ணப்பிச்சும் உரிமைத்தொகை வாங்காதவங்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை மறுபடியும் எடுத்து பதிவு பண்ணிண்டு இருக்கா... குறிப்பா, மலை மாவட்டமான நீலகிரியில், பழங்குடியினர், தோட்டத் தொழிலாளர்கள்னு ஒருத்தர்கூட விடாம மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவெடுத்திருக்கா... இதுக்காக, சி.டி.எம்.எஸ்., எனும், 'ஆப்'ல எல்லா விபரங்களையும், 'அப்லோடு' பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.''ஈ.வெ.ரா., உணர்வாளர்களை மதிக்கவே இல்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி''சீமானை சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''இல்ல... தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்காரே... ஒரு போராட்டம் சம்பந்தமா, இவரிடம் ஆலோசனை நடத்த, 'துாத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் நிர்வாகிகள், சமீபத்துல அமைச்சர் வீட்டுக்கு போயிருக்காங்க...''கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா காத்திருந்தும், அவங்களை உள்ளே கூப்பிடவே இல்லை... இவங்களுக்கு அடுத்து வந்தவங்க எல்லாம், அமைச்சர் அறைக்குள்ள போய், அவரை பார்த்து பேசிட்டுப் போயிருக்காங்க...''வெறுத்துப்போன கூட்டமைப்பினர், தடாலடியா அமைச்சர் இருந்த அறைக்குள்ள நுழைஞ்சு, 'உங்களிடம் ரெண்டு நிமிஷம் பேசணும்'னு சொல்லியிருக்காங்க... அமைச்சர் பட்டுன்னு ரெண்டு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, 'அப்புறம் பார்க்கலாம், நன்றி வணக்கம்'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாராம்...''இதனால, 'திராவிட மாடல் ஆட்சியின் அமைச்சர் எங்களை அவமதிச்சுட்டார்'னு, சமூக வலைதளங்கள்ல கூட்டமைப்பினர் குமுறிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தொடர்பு எல்லைக்கு அப்பாலயே இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கோவை மாவட்டம், அன்னுார் தாலுகா அதிகாரியை தான் சொல்றேன்... சட்டவிரோத மண் கடத்தல், அரசு புறம்போக்கு இடங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பிரச்னைகள் சம்பந்தமாக, அதிகாரியை தொடர்புகொண்டு புகார் சொன்னா, அந்த நம்பரை, 'சேவ்' பண்ணி வச்சுக்கிறாரு... அது சம்பந்தமா, அடுத்த முறை போன் செஞ்சா, போனையே எடுக்க மாட்டேங்கிறாரு பா...''சில நேரங்கள்ல, அவரது மொபைல் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால போயிடுது... அதே நேரம், 'கட்டிங்' சம்பந்தமா போன் அழைப்புகள் வந்தால், மட்டும் உடனுக்குடன் எடுத்துப் பேசிடுறாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.''நேத்து, கன்னியாகுமரியில இருந்து அனந்தன் பேசினாரு... அடுத்த வாரம் நம்மை பார்க்க வர்றேன்னு சொன்னாரு வே...'' என, அண்ணாச்சி கூற, பேசியபடியே நண்பர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 25, 2025 06:15

‘கொள்ளு என்றால் வாயை அகலத் திறப்பதும் கடிவாளம் என்றால் இறுக்க மூடிக்கொள்வதும் ‘ போல வரவு என்றால் போன் உடனடியாக இயங்கும் புகார் என்றால் மவுனம் காக்கும். அரசியலைப்போல, அதிகாரிகளுக்கும் இது சகஜமப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை