மேலும் செய்திகள்
செயலர், அமைச்சரையே மதிக்காத பெண் அதிகாரி!
17-Nov-2025
பி ல்டர் காபியை பருகியபடியே, ''அரசாணை எல்லாம் ஏட்டளவில் தான் இருக்கு ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''எந்த அரசாணையை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக அரசின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023, தொழில் உரிமம் விதிப்படி, 'அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள், தமிழில் பெயர் பலகை அமைக்கணும்'னு உத்தரவு போட்டா... அதாவது, 5:3:2 என்ற அளவில் முறையே தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் பெயர்கள் இருக்கணும் ஓய்... ''அதேபோல, 'தீண்டாமை சொல்லான, 'காலனி' என்ற வார்த்தை எங்கயும் இருக்கப்படாது... அப்படி தெருக்கள், சாலைகள்ல இருந்தா அதை நீக்கணும்... தெருக்கள்ல ஜாதி பெயர்களும் இருக்கப்படாது'ன்னும் அரசாணை போட்டா ஓய்... ''ஆனா, இதை அமல்படுத்த எந்த நடவடிக்கையையும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் எடுக்கல... அரசாணை வெளியிட்ட அரசும், இதை கண்டுக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''பெண் அதிகாரியின், 'டார்ச்சர்' தாங்க முடியலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுார் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இந்தம்மா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை தகாத வார்த்தைகள்ல ஒருமையில திட்டுறாங்க... ''அதுவும் இல்லாம, அவங்களது சொந்த வேலைகளை செய்ய சொல்றாங்க... யாராவது மறுத்தா, அவங்களை பணி நேரம் தாண்டியும் கூடுதலா வேலை வாங்கி, நோக அடிக்கிறாங்க அல்லது, 'மெமோ' குடுத்து பழி வாங்குறாங்க... ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும், மாசா மாசம் குறிப்பிட்ட தொகையை மாமூலா கேட்டு மிரட்டுறாங்க... ''இவங்களை பத்தி, இதே மாவட்டத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவனிடம் பலமுறை புகார் குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல... இதனால, இந்தம்மாவை கண்டிச்சு தொடர் போராட்டங்கள்ல ஈடுபட, அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''சரளாதேவி மேடம், சாயந்தரமா பேசுதேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''தலைவர் ஊர்லயே கட்சி காலியாகிட்டு இருக்கு வே...'' என்றார். ''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் இருக்கிற மணிமங்கலம் தான், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையின் சொந்த ஊர்... மணிமங்கலம் ஊராட்சி தலைவராகவும், மாநில காங்., பொதுக்குழு உறுப்பினராகவும், செல்வப் பெருந்தகையின் அண்ணன் ம கன் அய்யப்பன் தா ன் இருக்காரு வே... ''அப்படியிருந்தும், செல்வப்பெருந்தகையின் பூர்வீக வீடு இருக்கிற பகுதியைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட காங்கிரசார், அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற தி.மு.க., நிர்வாகி ஏற்பாட்டில், சமீபத்துல அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தி.மு.க.,வுல சேர்ந்துட்டாவ வே... ''தங்களது சொந்த ஊர் கட்சியினரையே இழுத்துட்டதால செல்வப்பெருந்தகை, அய்யப்பன் ஆதரவாளர்கள், சுமன் மீது கடுப்புல இருக்காவ... அதே நேரம், இதை பிரச்னையாக்கினா, தங்களது இமேஜ் பாதிக்குமேன்னு அடக்கி வாசிக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.
17-Nov-2025